Saturday 27 October 2012

ஸ்ரீ ஹரதத்தாச்சாரிய சுவாமிகள் வாழ்வில் நடந்தவை

ஸ்ரீ ஹரதத்தாச்சாரிய சுவாமிகள்
வாழ்வில் நடந்தவை

1. ஒருநாள் அக்னீஸ்வர ஸ்வாமிக்கு திருத்தொண்டு செய்யும் சில கணிகைகள் அவர்தம் பணிக்கு வராது, தாமதமாக மறுநாள் ஆலயப்பணிக்கு வந்தமையால், கோவிலதிகாரிகள் அவர்களைத் தண்டித்து, அக்கணிகைகளை கோவில் மண்டபத்தில் ஏற்றி அன்ன ஆகாரமில்லாது மிகவும் வருத்தினார்கள்.

ஹரதத்தரோ, வழக்கமாகத் தாம் வரும் காலம் தப்பி மத்தியானத்திற்குப் பின் தனது நித்திய ஆலயசேவையின் பொருட்டு அங்கே வந்தவரிடம் அக் கணிகைகள் தங்கள் துயரத்தினைக் கூற, “உங்களைத் தண்டிக்க அதிகாரிகள் இருக்கிறார்கள். இந்த தண்டனையைப் பெறும் உங்களது பாக்கியம் எனக்கில்லை!.... என்னைக் கண்டிக்கவும், தண்டிக்கவும் அதிகாரிகள் ஒருவரும் இல்லை! ஆலய சேவைக்கு தாமதமாக வந்த என்னை நானே தண்டித்துக் கொள்கிறேன்!” என்று தன் தலையை கருங்கல் தூணில் முட்டிக் கொண்டும், அழுது புரண்டும் மூர்ச்சித்துத் தரையில் விழுந்தார். இவரது இச்செய்கை கண்டு மனத்துயரம் அடைந்த கோவிலதிகாரிகள் செய்வதறியாது அக்கணிகையரை விடுவித்தனர்.

2. மேற்குறித்த நாளன்று ஹரதத்தர் தமது நித்தியக் கர்மாநுஷ்டங்களை முடித்துத் தம் கிருஹத்தில் சிவபெருமானுக்குப் பூஜை செய்து அபிஷேகம் செய்யும் போது, நாயொன்று தாக மேலீட்டினால் நாக்கை நீட்டவே, இவர் அந்த சங்காபிஷேக ஜலத்தினை அந்த நாயின் நாவிலே விட்டு எஞ்சியதைச் சிவலிங்கத்தில் அபிஷேகஞ் செய்தார். இவரது இக்காரியத்தினைக் கண்டவர்கள், “நீர் அநுசிதமான காரியத்தை இவ்விதம் செய்யலாமோ?” என்றதற்கு, “என்மீதுள்ள அன்பினாலே சிவபெருமானெ இந்நாயுருக் கொண்டு எழுந்தருளினால் யான் என்ன செய்ய?” என்றார்.

3. ஓர் நாள் மன்னர் சிவலிங்க பூபதி, அக்னீஸ்வரப் பெருமானுக்கு சமர்ப்பிக்கும் பொருட்டு மிகுந்த விலை மதிப்புள்ள பீதாம்பரம் ஒன்றினை ஹரதத்தரிடம் சமர்ப்பிக்கச் சொல்லி தம் பணியாளரிடம் தந்தனுப்ப, அச்சமயம் ஹரதத்தர் அக்னி வளர்த்து ஹோம காரியம் செய்து கொண்டிருக்கவே, அரசனுடைய பணியாட்கள் தன்னிடம் நீட்டிய அந்தப் பீதாம்பரத்தினை, சிவபெருமானை சிந்தனை செய்து அந்த ஹோம குண்டத்தில் இட்டு பஸ்மீகரமாக்கினார். இவரது இச்செய்கையை தம் பணியாள் மூலம் அறிந்த மன்னன், ஹரதத்தர் மீது எவ்வித வெறுப்புமின்றி, ஹரதத்தர் எல்லாம் தெரிந்தவராதலால் அவரையே இவ்விஷயம் குறித்துக் கேட்டறிய ஹரதத்தரது கிரஹத்திற்கு வந்தார்.

மன்னனது உளக்குறிப்பையறிந்த ஸ்ரீ ஹரதத்தாச்சாரியார், மன்னனை அழைத்துக் கொண்டு போய் அக்னீஸ்வரர் ஆலயத்தில் அம்மன்னன் அளித்த வஸ்திரம், ஸ்ரீ அக்னீஸ்வரருக்குச் சார்த்தப் பட்டிருப்பதைக் காண்பித்தார். சிவலிங்கச் சோழமன்னன், தமது குற்றம் பொருக்க வேண்டுமென அவரது பாதத்தைத் தம் கண்ணீரால் அலம்பி, மன்னிப்புக் கோரினான்.

4. ஹரதத்தர் வாழ்ந்த அக்ரஹாரத்திலே நிறைய பசுக்களை வளர்த்து வந்த ஒர் அந்தணன், ஒரு நாள் தன் வீட்டுக் கொல்லைப்புறமாக வைக்கோற் கட்டை மதிலோரமாகப் போட்ட பொழுது, அம்மதிலின் மறுபுறத்தில் உறங்கிக் கொண்டிருந்த இளம் கன்று ஒன்று அவ்வைக்கோற் கட்டின் பாரம் தாங்காது அதிர்ச்சியில் இறந்தது. இதையறிந்த அப்பிராமணன் மிகுந்த துயருற்றான்.

“நீ கோஹத்திச் செய்தாய்! நீ கோஹத்திச் செய்தாய்!!” என்று ஊரார் அவரை துவேஷித்து நிந்தா வார்த்தைகள் கூறி அவரை மேலும் கலக்கமடையச் செய்யவே, இதற்கோர் பிராயச்சித்தம் ஸ்ரீ ஹரதத்தர் சொல்வார் என்று ஹரதத்தரது வீட்டிற்குள் பதட்டத்துடன் நுழைந்த அப்பிராமணரது தலையில் வீட்டு வாயிற்படி இடித்தது. இடிபட்ட வலி தாங்காத அப்பிராமணன், “சிவ சிவ” என்று சொல்லிக்கொண்டே உள்ளே நுழைந்தான்.

அவர் வந்த விவரம் அறிந்த ஸ்ரீ ஹரதத்தர், “என் வீட்டிற்குள் நுழைந்த போது நீர் முதலில் சொன்ன சிவ எனும் சப்தத்தினால் உன் கோஹத்தி பாவ விமோசனமும். இரண்டாம் முறை சொன்ன சிவ சப்தத்தினால் மரித்த அக்கன்றுக்கு முக்தியும் உண்டாயிற்று!” என்று சொன்னார்.

ஹரதத்தருடைய விட்டில் அவ்வமயம் அங்கிருந்த இன்னொரு பிராமணன், “பாவிகள் ஈசனை வணங்குதல் முறையாகாது.... இவனோ கோஹத்தி செய்த மஹா பாபி.... இவன் செய்த அக்கொடுரச்செயல் இவன் சொன்ன சிவநாமத்தினால் நிவாரண மெய்துமோ!......? வேடிக்கை!!” என்று சொன்னான்.

இவ்விதம் தன் சந்தேகத்தினை வெளியிட்டவனை நோக்கி ஹரதத்தர், “சிவ பெருமானுடைய மாயையானது பிரம, விஷ்ணுக்களையும் மயக்கிவிடுமே!.... இவனை அது தப்பவிடுமா!... சிவ நாமத்தினாலே ஒழிக்கத்தக்கப் பாவத்தினை செய்யத் தக்கவர்கள் இவ்வுலகில் இல்லை என்பதினால்தான் ஸ்மிருதிகளிலே இந்த சிவநாமம் பிராயச்சித்தமாக சொல்லப்பட்டிருக் கிறது... உங்களுக்கெல்லாம் இவன் செய்த பாவம் நீங்கியது என்பது தெரியவேண்டுமென்றால், இவன் என்ன செய்யவேண்டும்?!....” என்று கேட்கவே, அப்பிராமணனுடைய கருத்தைக் கொண்ட ஊரார் அனைவரும் ஒருமனதாகத் தீர்மானித்து, “கோஹத்தி செய்த பிராமணன் தரும் புல்லினை அக்னீஸ்வரர் ஆலயத்திலுள்ள கல்நந்தி சாப்பிட்டால் ஒப்புக்கொள்வதாகச்” சொன்னார்கள்.

கோஹத்தி செய்த அந்த பிராமணனும், முறைப்படி பூஜை புனஸ்காரங்கள் முடித்து அக்னீஸ்வரர் ஆலயம் சென்று, அக்னீஸ்வரரை நமஸ்கரித்து, அங்குள்ள  நந்தியெம் பெருமானது வலதுபுறம் நின்று தம் கையில் அறுகம்புல் வைத்துக்கொண்டு, “அஷ்டமூர்த்தியாகிய சிவபெருமானைத் தாங்குபவரே!.... தயாநிதியே!... சிவநாமோச் சரத்தினால் என்பாவம் நீங்கிற்று என்றால், இந்தப் புல்லைச் சாப்பிட்டு என்னை எப்போதும் ரக்ஷித்தருளுக!” என்று வேண்டியவுடன், விருஷபதேவர் தன் நாக்கை அவர் பக்கம் சுழட்டி அவரளித்த அறுகன் புல்லைக் கிரஹித்து உண்டார். அதுகண்டு கூடியிருந்த அக்ரஹாரத்தினர் 'அவரது பாவம் ஒழிந்தது! ஒழிந்தது!!' என்றும், 'ஹரதத்தர் சாட்சாத் சிவ ஸ்வரூபியே' என்றுணர்ந்து அவரை நமஸ்கரித்து,  அவரவர் தத்தமது வீடு போனார்கள்.

5. நிறையப் பிள்ளைக் குட்டிகளுடன் மிகுந்த வறுமையில் வாடின சதாசிவம் எனும் பிராமணரது வீட்டில் ஓர்நாள் ஸ்ரீ ஹரதத்தர் உணவு உண்கையில் அவரது வறுமை நிலையறிந்து, மன்னர் சிவலிங்க பூபதியினால் அவரை அவரது ஏழ்மையிலிருந்து நல்ல நிலைக்கு ஏற்றினார்.

6. ஒரு சமயம் ஸ்ரீ ஹரதத்தரது தாயார் நெல்லைக் காயவைத்துக் கொண்டு இருந்த போது அந்நெல்லை ஓர் காளை வந்து மேயவே, அவரது தாயார் அக்காளையை வெகுவாய் அடித்துத் துரத்தினார். அதைக் கண்ட ஹரதத்தர், “ஏனம்மா இப்படிச் செய்தாய்?” என்று கேட்க, “சிவநிவேதனத்துக்கு ஒன்றுமில்லையாதலால், இதைக்கொண்டு அது நடத்தல் வேண்டும்.. அதனால் இப்படிச் செய்தேன்!” என்றாள்.

அச்சமயம், மன்னர் சிவலிங்கபூபதி இவருக்கு 400 மூட்டை நெல்லை அனுப்பியதில், இருநூறு மூட்டைகள் நதிப்ரவாகத்தில் போய்விட்டதை, கொண்டு வந்தவர்கள் சொன்னதும், ஹரதத்தர் தன் தாயாரிடம், “நீ காளையைத் திண்ணவொட்டாது அடித்து ஓட்டிய உன் துர்ச்செயலால்தான் நாநூறு இருநூறானது!” என்றார் சிரித்துக் கொண்டே!.

7. ஒரு சமயம் இவரது மனைவி சமையல் வேலையில் ஈடுபட்டிருந்த போது நாயொன்று களைந்து வைத்த அரிசியில் வாயை வைக்கவே, சமையல் வேலையில் இருந்த அவரது மனைவி, கையில் வைத்திருந்த அறிவாள் மனையினால் அடிக்க, அது நாய் மீது பட்டு மூர்ச்சித்து வீழ்ந்தது. அப்போது அங்கு வந்த ஹரதத்தர், நடந்தவை அறிந்து, "நீ வாசலைத் தாழிடாததினால்தான் நாய் உள்ளே புகுந்தது. உன் குற்றம் இப்படி இருக்க, நீ நாயைத் தண்டித்தது முறையல்ல!...” என்று கூறி அந்நாயைத் தன் மடிமீது கிடத்தி, அதற்கு உருத்திராக்ஷம் தரிப்பித்து, விபூதியை உடலெங்கும் பூசி, பஞ்சாக்ஷரம் ஜெபித்து, அந்நாயைப் பூதசரீரத்திலிருந்து, தேவ சரீரத்தினை எடுப்பிக்கச்செய்து அதற்கு கைலாயக் கதியருளினார்.

8. தன் தாய் காளையை வெருட்டியதற்கும், மனைவி நாயை அறிவாள்மனையால் அடித்ததற்கும் பிராயச்சித்தம் செய்வதற்கு, “தெரிந்தும் தெரியாமல் செய்த மஹா பாபங்களுக்கு, ஏகாந்தத்தில் இருந்து சிவ நாமத்தினை ஜெபித்தலே பிராயச்சித்தமாம்” எனும் பொருளில் ஒர் ஸ்லோகம் எழுதினார். இதில் முதல் வரி இவரும் இரண்டாம் வரியை ஹரதத்தர் குளிக்கச்சென்றபோது, இவருருவில் வந்த ஸ்ரீ மஹாதேவரும் எழுதியதாகும். அந்த ஸ்லோகம்:

ஞாநாஞ் ஞாநப்ரயுக்தாநாம் பாபாநாம் மஹதாமபி |
ஏகாந்த நிஷ்க்ரதிச் சம்போஸ்ஸகிர் தேவஹிகீர்த்தநாத் ||

9. ஓர் நாள் இவர் காவிரியில் ஸ்நாநம் செய்யப் போன போது, அங்கு ஒரு சண்டாளன் ஒருவன், தன் மனைவியைக் காவிரியில் குளிக்காதே! என்று தடுக்க, அவளோ, 'காவிரியைத் தரிசித்தாலும், அதில் குளித்தாலும் மஹாபாபங்கள் நீங்குவதாக நீதானே சொன்னாய்?' என்று திருப்பிக் கேட்டதற்கு, அச்சண்டாளன், “அடீ.. காவேரித் தீரத்திலே எவ்வளவு மணலுண்டோ அவ்வளவும் சிவலிங்கமடி!! “ என்றதைக் கேட்ட ஹரதத்தர்,  அச்சண்டாளனின் காலில் வீழ்ந்து வணங்கி, அவனது செருப்பைத் தன் தலைமீது வைத்து ஆனந்தக் கூத்தாடி, “உலகத்திலே  சிலர் ஞானத்தைத் தாங்குகிறார்கள்... வேறு சிலர்  தன் கர்மத்தைச் சுமக்கிறார்கள்.. நாமோ இந்தச் சிவபக்தருடைய பாதரக்ஷயைத் தாங்குகிறோம்!.” என்று மகிழ்ந்தார்.

10. தம்மைச் சரணடைந்து கைலாயம் செல்ல விரும்பிய  மன்னர் சிவலிங்க பூபதியிடம், “அரையாமப் பொழுதிற்குள் அக்னீஸ்வரர் ஆலயத்தையும், அதைச் சுற்றியுள்ள ஏழு சிவாலயங்களையும் தரிசனம் செய்தால் உமக்குக் கயிலாயக் காட்சி கிட்டும்!” என்று ஹரதத்தர் சொல்லியவாறு மன்னன் தன் பரிவாரங்களுடன், குதிரை மீதேறிச் சென்று அவ்வேழு சிவாலயங்களையும் தரிசித்து முடித்து ஸ்ரீ அக்னீஸ்வரர் ஆலயம் நுழைந்த போது, மன்னனுடனே ஓடிவந்தக் களைப்பில் குடைபிடிப்போனும், குதிரையும் மூர்ச்சித்து விழுந்தனர்.

சேவகனும், குதிரையும் அவ்விதம் மூர்ச்சித்த மறுகணம், அங்கு வந்த புஷ்பக விமானதில் அவர்கள் தம் சரீரத்துடனே ஏறி கயிலைக்குச் சென்றனர். மன்னனோ, மிகுந்த மனக்கலக்கம் அடைந்தவனாக, குதிரையும், தன் சேவகனும் செய்த பாக்கியத்தை தான் செய்யவில்லையோ? என்று மிகவும் வருந்தி, தன் குதிரையும், குடைபிடித்து வந்த சேவகனும் விமானம் ஏறி கயிலைக்குச் சென்றது போன்று, தான் செல்ல முடியாததற்கு ஸ்ரீ ஹரதத்தாச்சாரியரிடம் காரணம் கேட்டான். தன்னிடம் இவ்விதம் மிகவருந்தி உபாயம் கேட்ட அரசனிடம் ஹரதத்தர், “உன்னுடன் வந்த அவ்விருவரது சரீர சிரமத்தினை நீ அடையாமல், அரசன் எனும் அகந்தையில் ஏழு சிவாலயங்கள் சென்று வந்தாய். தேக சிரமம் பாராமல், தான் என்கின்ற எண்ணத்தை விட்டு, மீண்டும் நீ பாதாசாரியாய் அந்த ஏழு சிவாலயங்களை தரிசித்து விட்டு வருவாயேயானால் அவர்களுக்கு கிடைத்த அந்த நற்கதி உனக்கும் கிட்டும்.” என்றபடி மன்னனும் அதன்படிச் செய்து தன் சரீரத்துடன் தேவர்கள் பூச்சொரிய, சிவபெருமானுடன் வாஹனத்தின் மீதேறிக் கயிலை சென்றார்.

11. கஞ்சனூரில் புதிதாய் குடியேறிய தாசி ஒருத்தியை அடைய பக்கத்து ஊர் பிராமணன் ஒருவன் அவளிடம், தான் ஹரதத்தரின் புதல்வர் என்றும், வேண்டும் பொருள் தருவேன் என்றும் ஆசைவார்தைகள் நிறைய கூறி, அவளுடன் சில நாட்கள் சுகித்திருந்துவிட்டு ஓர்நாள் அப் பிராமணன் ஒன்றும் கொடுக்காமல் தனது கிராமத்திற்குச் சென்று விட்டான். தன்னை வஞ்சித்த அப்பிராமணனது செயலுக்கு நியாயம் கேட்க, அத்தாசியானவள் ஹரதத்தரை அடைந்து நடந்தது கூறி, நியாயம் கேட்டாள். ஹரதத்தர் ஒன்றும் பேசாது, சிவபெருமானே அவளோடிருந்துப் போயினார் என்று கொண்டு, தம்மிடம் உள்ள ஆயிரம் கழஞ்சு சுவர்ண ஆபரணத்தினை அவளிடம் கொடுத்து அனுப்பினார்.

அவள் செல்லும் வழியில் அக்கஞ்சனூர் வாசிகள் அவளிடம், “ஹரதத்தரது எட்டுப் பிள்ளைகளும் சன்மார்க்க நெறிபூண்டவர்கள்... தகப்பனின் கௌரவத்திற்கு இழுக்குத் தேடித்தராதவர்கள்...” என்றும், ஹரதத்தரது அருமை பெருமைகளை மேலும் கூறி, இறுதியாக, “அவரிடம் நீ பொய் சொல்லி வாங்கிய பொருளை அவரிடமே கொடுத்துவிடு!” என்றனர். அவளும் மிகுந்த மனக்கலக்கம் கொண்டவளாய் ஹரதத்தரிடம் மீண்டும் சென்று வாங்கிய பொருளைத் திருப்பித் தர, அவரோ, “அம்மா... இதை நான் சிவார்ப்பணம் என்று தந்துவிட்டேன்!... திரும்பப்பெறுவதில் பயனில்லை! அர்த்தமும் இல்லை!!” என்று மறுத்து அனுப்பிவிடவே, அத்தாசியானவள் சிவார்ப்பணமாகத் தந்ததை சிவனுக்கே செலுத்தி விடுவோம் என்கிற சித்த சுத்தி பிறந்து, அவ்வாயிரம் கழஞ்சு சுவர்ணாபரணத்தினைக் கொண்டு ஸ்ரீஅக்னீஸ்வரர் ஆலயத்திற்கு மண்டபம், விமானம் முதலிய திருப்பணிகளைச் செய்தாள்.
12. கஞ்சனூரில் ஒருசமயம் நடந்த இரதோற்சவத்தில் கலந்து கொள்ள, ஹரதத்தரின் புதல்விகள் இருவரும் தம் பிதாவை அடைந்து, ஊர்ப் பெண்டிரும், தம் தோழியரும் அணிந்துள்ள ஆபரணம்  போன்றுத்  தமக்கும்  அதுபோன்று ஆபரணங்கள் கேட்க,  ஹரதத்தரோ, “உங்கள் அவயத்தில் பூசும் விபூதியே உங்களுக்கு பொன்னிலும் சிறந்த பூஷணம். நீங்கள் சிரவணம் செய்யும் சிவநாமமே காதுக்கு சிறந்த அலங்காரம், நீவிர் செய்யும் சிவலிங்கார்ச்சனையே புனிதமான கரபூஷணம், சிவபெருமானுக்கு நீங்கள் செய்யும் நமஸ்காரமே பாதபூஷணம், இதுவே போதும்.... லௌகிக பூஷணங்கள் எல்லாம் முற்ஜென்மத்தில் இவையிவை வேணுமென்று ஸ்ரீ மஹாதேவரை யார் உபாசித்தார்களோ, அவர்களுக்குத்தான்!.... நமக்கல்ல!!” என்றார். தந்தையாரின் இப்பதிலினால் திருப்தியுறாத அவரது பெண்கள், ஏக்கமாக 'நீங்கள் தருவீரா மாட்டீரா? ' என்றனர்.

அவ்வமயம் ஒர் எருது ஒன்று வீதிவழியே சென்றதைக்கண்ட ஹரதத்தர், தன் பெண்களிடம், 'அவ்வெருதைத் தொடர்ந்து சென்று அதன் பாதம் பட்ட இடத்தில் உங்களுக்கு வேண்டியப் பூஷணங்கள் கிடைக்கும். போய் எடுத்துக் கொள்ளுங்கள்!' என்றபடியே அவர்கள் அந்த எருதின் குளம்படிபட்ட இடத்திலிருந்து நகைகளை எல்லாம் எடுத்து அணிந்து கொள்ளும்போது, தம் தந்தை ஏன் மாட்டின் குளம்படியில் உண்டான ஆபரணங்களை எடுத்து அணியச்சொன்னார்? என்று சிந்தித்து, அவர் அவ்விதம் சொன்னதன் அர்த்தம் புரிந்துகொண்ட ஹரதத்தரது புதல்விகள், தாம் கொணர்ந்த எல்லா ஆபரணங்களையும் ஸ்ரீ அக்னீஸ்வரருக்கும், ஸ்ரீ கற்பக நாயகிக்கும் அணிவித்து அழகு பார்த்தனர்.

13. திருவாவடுதுறை சிவாலயத்திற்கு ஒர் நாள் ஹரதத்தர் சென்று திரும்புகையில், புயல் காற்றுடன், பெருமழையும் வருஷித்தது. ஹரதத்தர் தமதில்லம் திரும்புகையில் இப்படி இடையூறு நேர்த்ததே என்று கலங்க, கோவடு நாதராகிய சிவபெருமான் இடையன் கோலம் தாங்கி, ஹரதத்தருக்குத் துணையாக வந்தார். தமதில்லம் வரை துணையாக வந்த அந்த இடைச் சிறுவனுக்கு ஹரதத்தர் உண்பதற்குப் பாகற்காய் குழம்பும், அன்னமும் அளிக்க, அதை ஹரதத்தர் மிக வருத்தியும் உண்ணாது, 'நான் என் வீட்டிற்குப் போய் சாப்பிடுகிறேன்!' என்று அவரளித்த அன்னத்தை, அச்சிறுவன் எடுத்துச் சென்று திருவாடுதுறை ஆலயம் நுழைந்து சிவலிங்கத்திற்கும், அம்பிகைக்கும் முன்பாக வாரியிறைத்துவிட்டு சிவலிங்கத்தில் மறைந்து அந்தர்த்தானமானான்.

மறுநாள் காலை கோவிலாட்கள் கோவடுநாத ஸ்வாமி முன்பு இறைந்து கிடக்கும் சாதத்தைக் கண்டு, 'இது ஆலய பரிசாரகர்களின் செயலே!' என்று தீர்மானித்து கோவில் பரிசாரகர்களை அழைத்துத் தண்டிக்க தொடங்கின போது முன்னிரவு நடந்தவைகளை சிவபெருமான் அசரீரியாகத் தெரிவித்து ஹரதத்தரின் அன்பையும், தனக்கு ஹரதத்தர் மீதான அன்பையும் தெரிவிக்கவே அங்கிருந்தோர் மிகவும் மகிழ்வெய்தி ஸ்ரீ ஹரதத்தரைப் போற்றினர்.

14. யதீஸ்வரர் என்பவரிடம் திரியம்பகர் என்பவர் சிஷ்யனாக இருந்து, தன் குருவிடம் இருந்து கற்க வேண்டியவைகளைக் கற்றும் “பஞ்சாக்ஷரத்தின் மகிமையை” அறியாமல் இருந்ததினால், யதீஸ்வரர் தன் சிஷ்யன் இவ்விதமாக இருக்கின்றானே என்று மிக வருத்தம் கொண்டு, அவனுக்கு எவ்விதத்திலேனும் பஞ்சாக்ஷர மகிமையை உணரச்செய்ய வேண்டும் என்று தகுந்த காலத்திற்காகக் காத்திருந்தார். இடையில் யதீஸ்வரர் தேக வ்யோகம் அடைந்து மரணகாலம் நெருங்குவதறிந்து, தன் படுக்கை அருகே தரையில் “ஸ்ரீ பஞ்சாக்ஷரத்திற்கு மேலான விஷயம் அறிவதற்கில்லை” என்று  தன் சிஷ்யன் திரியம்பகர் அறிவதற்காக எழுதி வைத்ததை, பால் வியாபாரம் செய்யும் கிழவி ஒருத்தி அதைக்கண்டு ஒரு ஓலை நறுக்கில் எழுதிவைத்துத் தன் காதோலையாக சுருட்டி மாட்டிக்கொண்டு, அது ஏதோ அறியக்கூடாத பெரிய ரஹஸ்யம் என்று கருதி, வேறு எவரும் அதை அறியாமலிருக்க, யதீஸ்வரர் தரையில் எழுதியதை, அவள் காலால் அழித்துச் சென்றாள்.

திரும்பிவந்த தன் சிஷ்யனிடம் தேக வியோகத்தில் இருந்த யதீஸ்வரர், தன் சிஷ்யனிடம் பால்காரக் கிழவியிடம் மிக உயர்ந்த செய்தி இருப்பதாக நடந்ததைக் கூறியபின் ப்ராணத்யாகம் செய்துகொண்டார். திரியம்பகரோ, எப்படியேனும் கிழவியிடம் உள்ள காதோலை ரகசியமறிய வேண்டுமென்று அக்கிழவியின் வீட்டிற்குப் போனான். அக் கிழவியோ தன்னுடன் குடும்பம் நடத்தினால் காதோலை தருவதாகச் சொன்னதற்கு இணங்கிய திரியம்பகர், அவளுக்கு வேண்டிய தொழிலெல்லாம் செய்து, அவளைப் ப்ரீதி செய்து ஓர்நாள் அக்காதோலையையும் பெற்றுக் கொண்டான்.

இவ்விதம் தான் தன் குருவின் உபதேசம் பெறுவதற்கு ஓர் கிழவியிடம் இவ்விதம் இழிவாக வாழ நேர்ந்ததே? இதற்குப் பிராயசித்தம் என்ன? என்று யோசித்து ஓர் தைப்பூசத்தன்று, காவிரியில் ஸ்நானம்செய்து, திருவிடைமருதூரில் ஸ்ரீ மஹாலிங்கேஸ் வரரை தரிசித்துப் பின், ஹரதத்தர் இல்லம் வந்து, தன் வரலாறு கூறி, தான் அதுகாறும் அக்கிழவியைக் கூடியிருந்த தோஷம் போக பரிகாரம் கேட்க, ஸ்ரீ ஹரதத்தர், “எவனொருவன் எப்பாவகாரியம் செய்தாலும், தைப்பூசத்தன்று காவிரி ஸ்நானம் செய்து, ஸ்ரீமத்யார்ச்சுனரை வழிபட்டவனாக இருக்கின்றானோ அவன் அதுவரை செய்த பாவத்திலிருந்து அப்போதே விடுபட்டவனாகின்றான்.” என்றார். இவ்விதம் ஸ்ரீ ஹரதத்தார் கூறியதை அவனும், ஊராரும் நம்பாததினால், அவர்கள் அனைவரையும் திருவிடைமருதூர் ஸ்ரீ மத்யார்ச்சுனேஸ்வரர் சந்நிதிக்குள் வரவழைத்து, அங்கு வீற்றிருக்கும் ஸ்வாமியின் திருவாக்கினாலேயே, “மஹாலிங்க தரிசனத்தினாலும், காவிரி ஸ்நானத்தினாலும் அவன் பாபம் போயது!.. போயது!” என்றுரைக்கச் செய்தார்.

15. எங்கும் நடமாட முடியாத தன் சகோதரியின் முடமான பிள்ளையை, அவனது காசியாத்திரை செய்யும் ஆசையை பூர்த்தி செய்ய, கஞ்சனூர் ஸ்ரீ அக்னீஸ்வரர் ஆலயத்தில் உள்ள பிரும்ம தீர்த்தத் திருக்குளத்தில் மூழ்கச்செய்து காசியில் உள்ள மணிகர்ணிகையில் எழச்செய்து, காசி விஸ்வனாதரையும், விசாலாக்ஷியையும் தரிசிப்பிக்கச் செய்தார். (அவர் கஞ்சனூரில் மூழ்கி காசியில் எழுந்த போது சங்கரர் உமையுடன் தோன்றி ஸ்ரீ ஹரதத்தரைப் பற்றிக் குசலம் விசாரித்தனராம்!) இதனால் கஞ்சனூர் அக்னீஸ்வரர் ஆலயத் திருக்குளத்திற்கு மணிகர்ணிகை என்றும் பெயர் உண்டு!.

16. அரவம் தீண்டி இறந்து போன இரண்டுச் சிறுவர்களை, மந்திரித்து விபூதியிட்டு உயிர்த்தெழச் செய்து, அவ்விருவரையும் “கருமம் முடிந்ததினால் இறந்தனர்” என்று அவர்களது பெற்றோருக்கு ஆறுதலுரைத்து, இறந்து போன இரண்டுச் சிறுவர்களை கயிலைக்கு அனுப்பினார்.

17. மன்னனது அரண்மனையில் திருடிய திருடன் ஒருவனை, அரண்மனைக் காவலாளிகள் துரத்த தஞ்சமாக ஹரதத்தர் இல்லம் புகுந்து, தான் அரண்மனையில் திருடியதையும், காவலாளி துரத்துவதையும் கூறியதைக்கேட்ட ஹரதத்தர், “உண்மையைப் பேசின நீ பிராமணனே!” என்று அவனுக்கு விபூதி தாரணமும், யஞ்ஞோபவீத தாரணமும் செய்வித்து உணவளித்து, அரண்மனை காவலர்களிட மிருந்து அவனைக் காத்து, திருத்தி அனுப்பினார்.

இவ்விதம் ஹரதத்தாசாரியார் சர்வ கர்த்தாவாகிய சிவபெருமானையே பூரணபாவனா தியானம் செய்து கொண்டிருத்தார்.  தன்னைச் சரணடைந்தோரை ரக்ஷிக்கின்ற ஸ்ரீ மஹாதேவர், அவருக்கு சாயுஜ்யம் கொடுக்க வேண்டி, தம்முடன் ப்ருங்கி, நந்தி, மஹாகாளர், பிரம்மா, விஷ்ணு முதலியவர்களோடு எழுந்தருளி உமையுடன் காட்சியளித்துச் சிவலோக ப்ராப்தமளிக்கும் முன், ஹரதத்தர் சிவபெருமானை நமஸ்கரித்து வந்தனம் செய்து, துதித்து, “ ஸ்வாமீ... இப்போது நீர் அடியேனுக்கு வரம் கொடுப்பீராகில், என்னுடனே என் இருபுறத்தும் உள்ள பதினான்கு வீட்டுக்காரர் களுக்கும் மீண்டும் வாரா நெறியாகிய முக்தியிலே சேர்த்தருளும்!.... இதுவே உம்மிடம் நான் கேட்கும் வரம்!...” என்று வேண்ட பக்தரக்ஷகரான ஸ்ரீ மஹாதேவர், “அங்கனமே ஆகுக!” என்று அங்கீகரித்ததன்  படியே அனைவரும் வாஹனத்தில் ஏறியதும், சிவபெருமான் ஹரதத்தரிடம், “நீ வேண்டியபடியே ஏறிவிட்டார்கள்... ஆனால் ஒர் ஆள் குறைகிறதே? அது யார்?” என்று கேட்க, ஹரதத்தர், “அவள் ஓர் கிழவி. ஒவ்வொரு நாளும் விக்னேஸ்வரருக்கு மோதகம் செய்து நிவேதிப்பவள். இன்றும் அவளது அந்தப் பணியிலிருப்பதால் அது முடித்து வருவாள்” என்றார்.

ஸ்ரீ மஹாதேவர் வினாயகரை விட்டு அக்கிழவியை அழைத்து வர அனுப்ப, அக்கிழவியோ, தன்னை கயிலைக்கு இட்டுச்செல்ல வந்த ஸ்ரீ கணபதியிடம், “அடுப்பில் மோதகம் இருக்கிறது. அதை விக்னேஸ்வரருக்கு நிவேதித்தப் பின் வருகின்றேன். இப்போது போகின்றவர்கள் முந்திப்போகலாம். நான் நிவேதனம் செய்யாமல் வருவதற்கில்லை!” என்கிற அவளது பதிலைக்கேட்ட ஸ்ரீ விக்னேஸ்வரர், தன் தகப்பனாரும், உலக உயிர்களுக்கெல்லாம் தாயுமானவனாக இருப்பவருமான ஸ்ரீ மகாதேவரிடம் வந்து நடந்தவற்றைச் சொல்ல, ஸ்ரீ மஹாதேவர், புன்முறுவல் பூத்து, கிழவியின் வைராக்கியத்தினை வியந்து, பிள்ளை வினாயகரை நோக்கி, “அக் கிழவியினுடைய பூசையை  அங்கீகரித்துக் கொண்டு அவளைக் கைலைக்கு நீ இட்டுக் கொண்டு வருக!!” எனச்சொல்லி அனைவரையும் ரதத்தில் ஏறுமாறு பணித்தார்.

ஹரதத்தருடைய அன்பர்கள் அனைவரும் ரதத்தில் ஏறும் சமயம், ஹரதத்தருடைய எச்சில் இலையில் மீதம் வைத்ததை தினமும் உண்டு  வந்த நாயொன்று, அவருடைய பிரிவைத் தாங்காது இரக்கத்தினால் மிகுதியாக அழவே, ஹரதத்தர் அதையும் தம்முடன் இரதத்தில் ஏற்றிவைத்து தாமும் ஏறி, அவர்கள் எல்லோரும் அழியாததும், பழிப்பற்றதும், ஆனந்தமே உருவமானதும், பகலிரவு அற்றதும், ஸ்ரீபரமேஸ்வரரையே ஒத்ததுமான ஸ்ரீ கைலாசத்தை அடைந்தார்கள்.





ஸ்ரீ ஹரதத்தாச்சாரியாரின் திவ்ய சரித்திரம் முற்றிற்று.

ஸ்ரீ ஹரதத்தாச்சாரிய ஸ்வாமிகள் சரித்திரம்


ஸ்ரீ மஹாதேவ ஜெயம்
|சிவாத்பரதரம் நாஸ்தி|





ஸ்ரீ ஹரதத்தாச்சாரிய ஸ்வாமிகள் சரித்திரம்


பிருகு முனியின் சாபமும்; சாபநிவர்த்தியும்!!

முன்பு ஒரு சமயம் விஷ்ணு, பிருகு முனிவரின் மனைவியைக் கொன்றதனால், பிருகு முனிவர் விஷ்ணுவை நோக்கி, “என் பத்தினியை வதைத்தத் துரோகியே!... நீ மிகவும் கீழான மற்ச, வராக, கூர்ம, முதலிய அனேகக் கீழ்யோனிப் பிறவியை அடைந்தும், இன்னும் அனேக ஜென்மம் எடுத்தும், உன்னுடைய அனைத்து பிறவிகளிலும் ஸ்திரீ வியோகம் எய்தித் துயருரும் வாழ்வெய்துவாயாக!” எனும் முதலிய பல தீய சாபங்களிட்டு, “இச்சாபம் உனக்கு இட்டது இட்டதுதான், இதை யாரும் மாற்ற முடியாது”- என்று கூறியமையினால் - விஷ்ணுவானவர் மிகுந்த துயரத்தை அடைந்து, தனக் கேற்ப்பட்ட இப்பிருகு முனியின் சாபநிவர்த்திக்கு உய்யும் வகையறியாது, நடுநடுங்கி உருத்திரரும், மகேஸ்வரரும், கணங்கள் புடைசூழப்பெற்றவரும், தன்னைப் புகல் அடைந்தோரைக் காப்பவருமான அம்பிகா சமேத சங்கரரைத் தன் ஹ்ருதயக்கமலத்தில் இருத்தி முறைப்படிக் கிருச்சிரசாந்திராயண  விரதாதிகளை அநுஷ்டித்துத் தேகத்தை வாட்டியும், ஆயிரம் தேவவருஷம் வாயுபக்ஷணம் செய்தும் மிகுந்த கோரத் தவமியற்றி சிவபெருமானைக் கண்டு, தன் சாபம் நிவாரணம் ஆகும் பொருட்டு உமாமகேஸ்வரரை சரணடைந்தார்.

இவ்விதம் கடும் தவமிருந்து, தன்னைச் சரணடைந்த விஷ்ணுவிடம், சரண்புகுந் தோரைக் ரக்ஷிக்கின்ற ஸ்ரீ மஹாதேவர், “குழந்தையே! உன் தபசுகண்டு ப்ரீதி கொண்டு உனக்கு வரம் கொடுக்க வந்தோம். நீயோ எமது பக்தனுக்கு தீங்கு செய்தவனாக இருக்கின்றாய்!.... எமது பக்தருக்குச் செய்யும் தீங்கனைத்தும் சந்தேகம் இல்லாமல் எமக்குச் செய்தது போலாயிற்று!.  நீ செய்த இந்த தபசினால் எமக்குச் செய்த துரோகம் நீங்கிற்று!. எமதன்பன் பிருகுவுக்குச் செய்த துரோகம் அப்படியே உள்ளது. அப்பாவமும் நீங்க வேண்டுமானால் பூவுலகில் காவிரிக்கு வடகரையில் உள்ள கஞ்சாபுரத்தை அடைந்து, அங்குள்ள கஞ்சாபுரீஸ்வரரை உத்தேசித்து தவம் புரிவையேல் உன் சாபம் நீங்கும். எம் பக்தனின் சாபத்தைக் கடத்தல் யாவர்க்கும் அரிது!.. அதை எம்மாலும் மாற்றுதல் அரிது!... அங்கனமாயினும், எமதருளினால் உனக்கு அநேக ஜன்மங்கள் இல்லாதொழிக!.. உனக்கு மற்சம், கூர்மம், வராகம், நரசிங்கம், தன்வந்த்ரி, மோகினி, நாரதர், பிருது, சனற்குமாரர், விராட்டு எனும் இப்பத்து அவதாரமும் உனக்கு ஆவிர்ப்பாகமாகவும், பார்க்கவர், இராமர், பரசுராமர், கிருஷ்ணர், வியாஸர், பலபத்திரர், கபிலர், நரநாராயணர், யஞ்ஞர், வாமனர், தத்தாத்திரேயர், விருஷபர், புத்தர், கற்கி, சுதர்ஸனர் என்னும் இப்பதினைந்து அவதாரமும் உனக்கு யோனிசமாகுக... உனக்கு பிருகு இட்ட அச்சாபம் தடையின்றி நிகழும்.!” என்றும்;

“எமது ஆச்ரமத்திலுள்ள சாதுக்களை வெறுப்பவர்கள் மிகவும் கீழானவர்கள். எமது பக்தர்களைக் காப்பவர்கள் எனக்கு மிகவும் பிரியமானவர்களே. என்பக்தர்களை வெறுப்பவர்களுடன் பழகும் மனிதருக்கு கொடிய பாவம் விளையும்... நீ உன் கவலையை விட்டுவிடு!. உன்னுடைய ஒவ்வொரு அவதாரமும் லோகோபகாரமாகவே இருக்கும்!. கௌதமர், ததீசி, கண்ணுவ மஹரிஷி, சியவனர், பிரம்மா, நந்தி என்னும் ஷண்முனிவர்களும் ஒவ்வொரு காலகட்டத்தில், ஒவ்வொரு காரணங்களுக்காக தமக்குத் துரோகம் செய்த பிராமணர்ளை, வைதிக நெறி பிறழ்ந்தவர்களாகவும், சிவநிந்தை புரிபவர்களாகவும், நெற்றியிலே யோனிக்குறியை உடையவர்களாகவும் போகுமாறு சபித்துவிட்டார்கள்.”

“அதன்படியே இக்கஞ்சாபுரியிலே வாழும் அந்தணர் (வைணவர்) ஒருவர் தமக்குப் பிள்ளைவரம் வேண்டித் தவஞ்செய்யப்போகின்றார். அப்போது நமது ஆஞ்ஞையின் படியே நீ அவருக்குப் பிள்ளையாகப் பிறப்பாயாக!” என்று அருளி, தன் பக்தர்களாக விளங்கும் பிரம்மச்சாரி, கிருஹஸ்தன், வனப்பிரஸ்தன், ஸந்யாசி என்னும் நான்கு ஆச்ரமஸ்தார்களைப் பற்றியும், அவர்களது மேலான லக்ஷணங்கள் பற்றியும் தன்னைச் சரண்புகுந்த திருமாலிடம் கூறி, சம்சாரசாகரத்தினைக் கடக்கும் உபாயமாக, 'பைத்தியத் தன்மையிலேனும், மோகத்திலேனும், நித்திரையிலேனும், “சிவ” எனும் இரண்டெழுத்தை ஒருவன் சிந்தை செய்வானாயின், அவனை எம்மைப் போல குருவாக அறிவாயாக! பிரணவத்தோடிசைந்த பஞ்சாக்ஷரத்தினை ஒருமுறை உச்சரிப்பானாயின், அவன் எந்நிலையில் இருந்தாலும், எக்காலமும் பூசிக்கத் தக்கவனே!... ருத்திரன், சம்பு, மகாதேவ, சர்வஞ்ஞ, சங்கர, ஸ்ரீ வாமதேவ, ஸ்ரீகண்ட, ஸ்ரீ நீலகண்ட, என்னும் இந்நாமங்களைச் சொல்லி தியானிப்பவனை நானே என்று அறிவாயாக!” என்று கூறிய ஸ்ரீ மஹாதேவர், திருமால் அக்கஞ்சபுரியிலே அவதரித்த பின்னர் ஹரியினது சாபநிவர்த்திக்கும், அவர்தம் மனோபீஷ்டங்களெல்லாம் நிறைவேறவும் அருளுவதாகச் சொல்லி அந்தர்த்தான மானார்.

ஹரி ஹரதத்தராக அவதரித்தது!!

ஷண்முனிவர்களின் சாபத்தினால், நெறிபிறழ்ந்து, எப்போதும் சிவநிந்தனை செய்தும், யோனிக்குறியை நெற்றியில் இட்டும், சதா வேதநிந்தை செய்தும், பாஞ்சராத்திர பாராயணர்களாயும் வாழுகின்ற பிராமணர்களுள், பாஷண்ட மதமாகிய (புறச்சமயம்) வைஷ்ணவத்தினை அநுசரித்திருக்கும் வைஷ்ணவர்களை திருத்தவும், சிவ பெருமானே பரம்பொருள் என்றும், அவர்களை இவ்வைதிக நெறிக்கண் நிலை நிறுத்தவும், காச்யப கோத்திரரான வாசுதேவர் என்பவருக்கு இத் திருமாலானவர் கும்பகோணத்தருகில் உள்ள கஞ்சாபுரியிலே அவரது மனைவி வயிற்றிலே உற்பத்தியானார்.

இவ்வண்ணம் ஸ்ரீ பரமேச்வரரது அநுக்ரஹத்தினால் அக்கஞ்சாபுரியிலே வாழ்ந்துவந்த வாசுதேவருக்கு திருமால் மகனாகப் பிறந்ததும், அவரது பெற்றோர் மிகவும் மனமகிழ்ந்து, சுருதி சாஸ்திரம் அறிந்தவர்களை அழைத்து அவர்களுக்கு முறைப்படி  தான தருமம் செய்து ஜாதகர்மம் செய்வித்துப் பின் பதினோராம் நாள் பிள்ளைக்கு “சுதர்ஸனர்” என்று பெயரிட்டனர்.

ஹரதத்தரின் சிவபக்தி!!

சுதர்சனர் தமது குழந்தைப் பருவத்தில் வைணவ குடும்பத்திற்கு ஏற்றார்போல் இல்லாமல், தமது சிறுவயதிலேயே தம்முடல் முழுதும் திருநீறு பூசிக்கொண்டும் சிவ நாமத்தினை ஜெபித்துக் கொண்டுமிருந்தார். அவரது அக்கிரஹாரத்தில் வசித்த இன்னொரு பிராமணரானப் பசுபதி என்பவரிடமிருந்து விபூதி, ருத்திராக்ஷம் பிரசாதிக்கும்படி அன்புடன் வேண்டி, தமது பெற்றோர் அணிவித்த வெள்ளைமண், மஞ்சட்பொடிகளை அழித்து சர்வாங்கமும் விபூதி உத்தானஞ்செய்து, திரிபுண்டரமாகத் தரித்து, உருத்திராக்ஷம் பூண்டு, அருகில் உள்ள ஸ்ரீஅக்னீஸ்வரர் ஆலயம் சென்று, மஹாதேவரைப் பிரதக்ஷிணம் செய்து, சிவபெருமானுக்கு உவப்பளிக்கின்ற திருத்தொண்டுகளைச் செய்ய ஆரம்பித்தார்.

‘குழந்தை ஏதோ அறியாமல் (பாலக்கிரீடை) செய்கிறான், பின்னர் சரியாகி விடுவான்!' என்று எண்ணிய ஹரதத்தரது பெற்றோர்கள், அவருக்கு மூன்றாம் வயதில் சௌள கருமமும் (மொட்டையடித்து காது குத்தல்), ஐந்தாம் வயதில் உபநயனமும் செய்வித்தனர். அதன் பிறகும் அவருடைய சிவ பக்தியின் போக்கில் மாறுதல் ஏற்படாதிருக்கவே அவரது பெற்றோர் அவரை அழைத்து, “குழந்தாய்!... நீ சிவன் கோவிலுக்கு ஓருகாலமும் செல்லலாகாது! விபூதிகொண்டு உத்தூளன திரிபுண்டர தாரணஞ்செய்து உருத்திராக்ஷத்தினையும் அணியளாகாது!... சிவபக்தர்களோடு இணங்காதே! மறந்தும் புறம் போகாதே!.... ஸ்ரீவிஷ்ணுவின் சுத்தமான பாதத்தினை சிந்தனை செய்!... நமக்கென்று வகுத்துக் கொண்ட விதிகளைச்செய்!” என்றெல்லாம் பலமுறை வேண்டினார்.

ஆனால், ஸ்ரீ சுதர்ஸனரோ தமது பெற்றோர் சொல் கேளாமல், தினமும் விபூதி, ருத்ராக்ஷம் அணிந்து ஸ்ரீ அக்னீஸ்வரர் ஆலயம் சென்று வணங்கி, அங்கே திருத்தொண்டு செய்து வருவாராயினர். இவரது இவ்வொழுக்கம் கண்ட வாசுதேவர், தமது வார்த்தையைக் கேட்காமல் தம் மதத்திற்கு இவ்விதம் இழுக்காக நடக்கின்றானே? என்று மிகுந்த கோவம் கொண்டு சுதர்சனரைக் கயிற்றால் கட்டி, கசையினால் அடித்து, வேதவிரோதமானதும், பெரியோரால் கண்டிக்கத்தக்கதுமான தமது மத ஆசாரத்தினை உபதேசித்தார்.

இவ்விதம் செய்தும் சுதர்ஸனர் மனம் மாறாமல் உறுதி உடையவராய்த் தமது மனோவாக்குக் காயங்களினால் சிவபெருமானுக்குப் பிரியமானவராகவே இருந்தார். தாம் எவ்வளவு சொல்லியும் தனது புத்திரனது மனம் மாறாததைக்கண்ட சுதர்ஸனரின் தந்தை வாசுதேவர், அவரை மிகக்கடுமையாகத் தண்டிக்கும் செயல்களிலும் ஈடுபட்டவரானார். 

ஒரு நாள் அவ்வாசுதேவர் தம் மனைவியிடம், “அவன் என் வார்தையைக் கேட்கும் வரை நீ அவனுக்கு அன்னமிடாதே! பட்டினியானது இவனது சாதாரண பக்தியையும் மாற்றும் வல்லமையுள்ளது!!..” என்று தம் அநுபவ வார்த்தையைப் பணித்து, தம் பணியைத் தொடர்ந்தார்.

பசியில் வாடின ஸ்ரீ சுதர்சனர் தம் பசிக்கு அவரது தாயாரிடம் அன்னம் கேட்க, அவரது தாயாரோ, “என் செல்லமே!... மாதா பிதா சொல்வதைக் கேள்!.... அதைவிடவும் வேதம் என்ன இருக்கின்றது? உன் பிதாவே உனக்கும் தெய்வம். எனக்கும் தெய்வம்!.... அவரது பேச்சை என்னால் தட்ட முடியாது... அவரது சொல்பேச்சினை நீ எப்பொழுது கேட்கின்றாயோ அப்போதுதான் உனக்கு அன்னமிடுவேன்! நான் என்ன செய்வேன்?” என்று தன் மகனின் மாறாத அவரது செய்கைக்கு வருந்திக் கூறினாள்.

தனக்கேற்பட்ட “பசி” யின் வருத்தத்தைப் பயன்படுத்தித் தான் கொண்ட கொள்கைக்கு விரோதமாய் இருக்குமாறு வலியுறுத்தும் தம் பெற்றோரது பேச்சினைக் கேட்டதுமே, மிகுந்த வைராக்கியத்துடன் தன் வீட்டை விட்டு வெளியேறி ஸ்ரீ அக்னீஸ்வரர் ஆலயம் சென்று, ஸ்ரீ அக்னீஸ்வரப் பெருமானையும், ஸ்ரீ நந்திகேஸ்வரரையும் நமஸ்கரித்து, மிகவும் மனம் இளகி, “என் சம்புவே!... மஹாதேவரே!... நீவிரே என் பிதா, உமாதேவியரே என் தாயார், உமது புதல்வர்களே எனக்குச் சகோதரர்கள்.... உமக்கு ஆப்தர்கள் யாரோ அவர்கள் எனக்குப் பரிசாரகர்கள்.... அப்படி இருந்தும் உமது தரிசனம் கிடைக்காததால், இவ்விடத்தே நான் நாயையும் புழுவையும் ஒத்துத் திரிகின்றேன். ஸ்வாமீ! நான் உமது பூசையிலே வழுவினவனாக இருந்தாலும், தீனபந்துவாகிய நீர் என்னை ரக்ஷிக்க வேண்டாமா! அந்த விஷ்ணுவும், பிரும்மாவும் உம்மைக் காண முடியாதபோது நான் எப்படி உம்மைக் காண்பேன்?! கிருபாநிதியே!.... அடியேனுக்கு ப்ரஸன்னராகுவீர்!.... எம்மிடம் வருகவென்று அடியேனை எப்போது அழைப்பீர்!?...... என் பெற்றவர்கள் போல இகழ்ந்து என்னைக் கைவிட்டு விடாதீர்!... உம்மைச் சரண் புகுந்த என்னை நீர் காக்காவிடில் வேறு புகலிடத்திற்கு எங்கு நான் போக?..... சம்போ!... எனக்கு நீர் பிரஸன்னமாகாவிடில் வேறு என்னதான் உம் எண்ணமோ!?..... கேவலமான இந்த பசிக்கு என்னை இறையாக்காமல் காப்பது உன் கடமையன்றோ?” என்று பலவாறு மனமுருகி தோத்திரம் செய்பவரானார்.

ஹரதத்தருக்கு சிவனார் ஞானோதயம் அருளியது!!

தம்மைப் பலவாறு தோத்திரம் செய்யும் அப்பாலனது அன்பிற்கு இரங்கின சங்கரர், “குழந்தையே! இனி நீ அஞ்சற்க!” என்று தம் திருவுருவைத் தரிசிப்பித்தருளினார். அத்தி முதல் எரும்பீறான உயிர்கள் அத்தனைக்கும் சித்தம் மகிழ்ந்தளிக்கும் பரமதயாளனான ஸ்ரீ பரமேச்ரரைக் கண்டதும், ஸ்ரீ சுதர்சனருக்கு உரோமச் சிலிர்ப்புண்டாகி, தன் வயமிழந்தவராகி, சாஷ்டாங்கமாக வீழ்ந்தார்.

பின்னர் சிவபெருமான் சுதர்ஸனரைத் தழுவித் தம் மடிமீதமர்த்தி, உச்சிமோந்து, “உன் வருத்தம் யாது?” என்று வினவ, அதற்கு அப்பாலர், “அண்டமோரணுவாம் பெருமை கொண்ட நீவிரே ஆன்மாக்களுக்கு அருள் புரியுமாறு அணுவோரண்டமாஞ் சிறுமை கொண்டீராதலின், எம் வினைவிளைவெல்லாம் நீரே அறிவீர்!” என்றார். தன்னைச் சரணடைந்த அப்பாலனுக்கு இனி தேவையானது சாஸ்திர ஞானமே எனும் சிவபெருமானின் திருவுளப்படி, சுதர்ஸனரைச் சோதிக்க எண்ணி, “உனக்கு என்ன வேண்டுமோ கேள்!” என்றார்.

அதற்கு சுதர்ஸனரோ, “ஸ்வாமீ!.. என்னைப் பாலனென்று ஏய்க்காதீர்!.... அரசனைக் கண்டவன் அருகம்புல்லைக் கேட்பானா?... உம் சித்தம் எதுவோ?” என்றார்..

அதன் பின்னர், ஸ்ரீ மகாதேவர், தக்ஷிணாமூர்த்தியாய் எழுந்தருளி, தம் திருக்கரத்தினால் ஓர் யந்திரம் எழுதி அதை சுதர்ஸனரது சிரசிலே அமைத்து, “இனி நீ எல்லாம் அறிந்தவனாகுதி!” என்றருளி, அப்பாலனுக்கு முறைப்படி எல்லாம் செய்வித்து, பஞ்சாக்ஷரம் உபதேசித்து, வேதசிவாகமப்படி பூஜா விதியையும் உபதேசித்து, உத்தமமான ஸ்படிக லிங்கத்தினையும் சுதர்ஸனர் கையில் கொடுத்து 'சுதர்ஸனாசாரியார்' என்ற பெயரை மாற்றி, 'ஹரதத்தாசாரியார்' என்கிற திருநாமமும் இட்டருளி, அவ்வாலய சிவலிங்கதில் அந்தர்த்தானமானார்.

பின்னர் ஹரதத்தர் தம் வீட்டிற்குச் சென்று தம் பசிக்கு அன்னம் கேட்க, தூங்கிக் கொண்டிருந்த அவரது தகப்பனார் எழுந்துவந்து, “வெள்ளேரு ஏறுவோன் கோயிலுக்கு நீ போனதினால், உனக்கு அன்னம் கிடையாது. நம் ஆசாரத்தினை ஒழுகாதிருப்பதினால் உனக்கு அன்ன ஆகாரம் கிடையவே கிடையாது. இனியும் நீ இப்படியெல்லாம் மயானத்தில் வசிக்கின்ற அந்த பிச்சைக்காரனையும், பித்துப் பிடித்தவனையும் சிவனென்று கதியாய் இருந்தால் உன் காலை ஒடிப்பேன்!” என்று பலவாறு திட்டவாரம்பித்தார்.

ஹரதத்தர் தம் பிதாவிடம் வாதித்தது!!

'பித்தனாகவும்' 'பிச்சாண்டியாகவும்' விளங்கும் ஸ்ரீ மஹாதேவரது மாயா குணமறியாத தன் தந்தையை நினைத்து ஸ்ரீ ஹரதத்தாசாரியார் மிகவும் வருந்தி, “பிச்சாண்டியாய் இருப்பதும், பித்தனாக இருப்பதும் அவரது மாய விளையாட்டு!.... உண்மையாகவே ஸ்ரீ மஹாதேவரான அவர் அப்படித்தான் என்றால் அவருக்குப் 'பிச்சையிட' எவனுக்கு யோக்கியதையும் அருகதையும் இருக்கின்றது?” என்று கேட்டு, ஸ்ரீமஹாதேவரின் ஸர்வேஸ்வர தத்துவ மகத்துவங்களை தன் தகப்பனாருக்கு சொல்ல ஆரம்பித்தார்.  இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஆரம்பித்தது.

சர்வேஸ்வரத்துவ விவாதத்தில் தன் தரப்பு நியாயங்களை தன் தகப்பனார் ஏற்காததினால் மிகுந்த வெறுப்புற்று, “கௌதமராலும், ததீசியாலும், நந்திகேஸ்வரராலும் சபிக்கப்பட்ட பிராமணருக்குள்ளே நீயும் அகப்பட்டதால் பரமபதியான ஸ்ரீ மஹாதேவருடைய மகிமை உனக்கும் எப்படித்தெரியும்? சிவபெருமான் சாதாரண மானவர் என்றால், பித்தன் என்றால், இரந்துண்ணும் பிச்சாண்டியாக இருந்தால், நீ வணங்கும் விஷ்ணுவானவர் ஏன் அவரை பூசித்தார்?. ஸ்ரீ மஹாதேவரிடம் இருந்து வரம் வாங்கினவராக இருந்தது ஏன்? தம்முடைய அவதாரங்களில் ஸ்ரீ மஹாதேவரிடம் நிக்ரஹப் பட்டு பங்கம் அடைந்ததும் ஏன்?! என்னை பூசியாதே என்று நீ ஏன் சொல்கிறாய்?.... நான் விஷ்ணுவை சேவிக்க வேண்டுமானால் நீ பரமாகப் போற்றும் அந்த விஷ்ணுவினுடைய சர்வேஸ்வரத்துவத்தினைப் பற்றி வேதாகம முறைப்படி சொல்லுங்கள் பார்ப்போம்!!” என்றும்;

"உம்மால் தரப்பெற்ற என்னுடைய இச்சிறு தெய்வப் பெயரும் (சுதர்ஸனம்), உம்மால் செய்விக்கப்படும் அவைதிக கர்மங்களிலும் எனக்கு சிறிதும் உடன்பாடு கிடையாது என்பதையும் அறியும்!.  சிவபெருமான் அருளிய வேத-சிவாகமங்கள் இரண்டும் நமக்கு முக்கியப் பிரமாணங்கள்!. இவற்றால் உரைக்கப்படும் உண்மைப் பொருளாய் திகழ்பவர் பரமபதியாகிய ஸ்ரீ பரமேச்வரர் ஒருவரே!  அவரை அடைய சன்மார்கமே- சிறந்த சைவமார்கம் ஆகும்!. இச்சிறந்த சைவ சமயத்தால் பெறப்படும் சிவதீட்சையே முக்திக்கு சாதனம்!. இவ்வுண்மை முக்தியடைபவர்கள் சிவனடியார்களேயன்றி வேறு எவரும் இல்லை!!. இதுவே எனது நிச்சயமான முடிவும் ஆகும். சர்வமங்கள குணாகரராய் விளங்கும் ஹரன் என்னும் திவ்ய நாமத்தை உடைய சிவபெருமானுக்கு நான் என்னை 'தத்தம்' செய்து விட்டேன் ஆகையால், இனிமேல் என்னை நீங்கள் உட்பட "ஹரதத்தர்" என்று உணரக்கடவீராக! என்று சொன்னார்.

இவ்விதம் ஹரதத்தர் தம் தந்தையிடம் சொன்னதும், தம் பிள்ளை மீது மிகுந்த ஆச்சர்யம் கொண்டவராகி, ஹரதத்தரது மனதை மாற்ற அவரும் தனக்குத் தெரிந்தமட்டில் ஏதேதோ சொல்லியும், ஹரதத்தாசாரியரின் எதிர் கேள்விகளுக்கு அவரது தகப்பனாரால் பதிலிருக்க முடியாது போயிற்று.

தன் தகப்பனாரிடம் வாதிடும் இவரது இச்செய்கை அறிந்த ஊராரும், அங்கு வசித்த வைணவர்களும், பெரியோரும், சைவர்களும், அன்றியுள்ள மதவாதிகளும் சேர்ந்து இவருடைய வாதில் உள்ள உண்மை உணரத் தலைப்பட்டனர்.  தினம் தினம் வாதம் விருத்தியானது. அவ்வூர் வைணவர்கள் மிகவும் ஸ்தம்பித்தவர்களானார்கள். ஸ்ரீ ஹரதத்தரின் வாக்கிலிருந்து வரும் வார்த்தைகள் ஒவ்வொன்றும் அவ்வைணவர்களின் உச்சந்தலையில் இடிவிழுந்தது போல அவர்களை நிலைகுலையச்செய்தது.

இவ்விதமான ஹரதத்தரின் வாதம் ஒர் முடிவுக்கு வரவேண்டுமானால், அவர் பழுக்கக் காய்ச்சின இரும்பு முக்காலியில் அமர்ந்து ஹரியையேனும் (விஷ்ணு) ஹரனையேனும் (சிவபெருமான்) நியாயமான வாதத்தின் மூலம் இதுதான் “பரம்” என்று தாம் நியமிக்கும் பெரியோர் முன்னிலையில் ஸ்தாபித்தால் அவ்வூரில் உள்ளவர்கள் (எதிர்வாதம் செய்வோர்) தாங்கள் அந்த மதத்தை அடைகிறோம்' என்று உறுதி அளித்தமையால் ஹரதத்தாசாரியாரும் ஏதுமறியா ஏழை வைணவர்களான அவர்களது அந்த நிபந்தனையை ஏற்றார்.

(23.12.1904 ம் ஆண்டு, ஸ்ரீ பி. வ. இரத்தினசாமிப் பிள்ளை என்பவர் விஷ்ணுவை “பரம்” என்று சொல்லித் திரிவோரை, திருத்தி நல்வழிக்கு திருப்ப, ஓர் உடன்படிக்கை ஏற்பாடு செய்து, அதற்கு ஸ்ரீ பாம்பன் ஸ்வாமிகள் தலைமையில் இருதிரத்தாரும் கூடி, சைவர்கள் தமது கொள்கையை நிரூபணம் செய்தால் வைணவர்கள் “சைவ சமயத்தை” தழுவவேண்டும் என்றும், அவ்விதமே வைணவர்கள் தம் கொள்கையை நிரூபணம் செய்தால் சைவர்கள் அனைவரும் “வைணவராவது” என்கிற உடன்படிக்கை ஏற்பாடானது. இந்த ஏற்பாட்டை சைவர்கள், வைணவர்கள் மீதான அவநம்பிக்கையினால் இருதிரத்தாரின் வெற்றி தோல்வி விஷயமாக ஓர் உடன்படிக்கை எழுதி, ரிஜிஸ்டர் செய்து வாதுக்கு அழைக்க, அந்த ரிஜிஸ்டரில் உள்ள வாசகத்தைக்கண்ட வைணவர்கள் “எங்களுக்கு வாதத்தில் விருப்பில்லை” என்று வாளாயிருந்துவிட்டனர். ஸ்ரீ ஹரதத்தாச்சாரியார் காலத்தில் வாழ்ந்த “வைணவர்கள்” எதில் உண்மை இருக்கிறது என்றறிய “உண்மையாகவே” ஆவல் கொண்டிருந்தனர் என்பதும், ஸ்ரீ பாம்பன் ஸ்வாமி காலத்தில் வாழ்ந்த வைணவர்கள் அவ்வுண்மையை உணரக்கூட விரும்பவில்லை என்றே தெரிகிறது!. ஷண் முனிவர்களின் “சாபத்தை” கடத்தல் அரிது என்பதையும்; ஒவ்வொரு காலகட்டத்திலும் இவ்வைணவர்கள் எவ்விதம் மாறியுள்ளனர் என்பதையுமே இது காண்பிக்கிறது.)

வைணவர் நிபந்தனையும்!. தகிக்கும் முக்காலியும்!!

வைணவர்களின் நிபந்தனைப்படி ஸ்ரீ ஹரதத்தாசாரியார் பாஞ்சராத்திரி களை (வைணவர்கள்) ஸ்ரீ அக்னீஸ்வரர் ஆலயத்திற்கு சிவனே பரமென்று ஸ்தாபிக்க  அழைக்க, அவ்வைணவர்களோ, “நாங்கள் மதம் கொண்ட யானை துரத்தினாலும் சிவாலயம் நுழையோம் என்கிற நியமம் பூண்டவர்கள்... இங்குள்ள ஸ்ரீ ஹரியின் ஆலயமும் அதி விசாலமானதே!... அவ்வாலயத்திற்குள் வந்து அந்தச் சிறுவன் சிவனே பரமென்று உரைத்து ஸ்தாபனம் செய்யட்டும்!” என்று சொல்லி, முன்னர் ஏற்படுத்திய நிபந்தனையின்படி அவ்வூரிலுள்ள ஸ்ரீ வரதராஜஸ்வாமி ஆலயத்துள் பழுக்கக் காய்ச்சின இரும்பு முக்காலியை ஏற்பாடு செய்து, ஸ்ரீ ஹரதத்தாச்சாரியாரை வாதுக்கு அழைத்தனர்.

ஹரதத்தர் அதற்கிசைந்து, அவ்வாலயத்துள் உள்ள கருடனுக்கும், வரதராஜ ஸ்வாமிக்கும் இடையில் போட்டுவைத்திருந்த பழுக்கக்காய்ச்சின இரும்பு  முக்காலியில்  ஏறுமுன்னர்,  அவ்வாலய கருவரை முன்பு நின்று, “ஹே! ஸ்வாமி!... மஹாதேவரே!.. உன் சந்நிதியிலிருந்து சர்வசாரமான உபநிஷதார்த்தங்களால் சிவபரத்துவ ஸ்தாபனம் செய்யப் போகின்றேன்.  நான் ஏறப்போகின்ற இக்காய்ந்த இரும்பு முக்காலியானது குளிர்ந்த ஜலத்தைப்போன்று ஆகவேண்டியது!” என்று அங்கு வீற்றிருக்கும் ஹரியை தாம் வணங்கும் சதாசிவனாகப் பாவித்து வேண்டி அம்முக்காலியை பிரதக்ஷிணம் செய்து, உமாதேவி சமேதரான சிவபெருமானைத் தியானித்து, அங்கு ஆவலுடன் காத்திருக்கும் சைவ - வைணவர்களுக்குள்ளே சிவ நிந்தனை செய்வோரை நோக்கி - ஸ்ரீ சுருதி சூக்திமாலை, பஞ்சரத்ன மாலை, வேத ப்ரமாணம், புராண ப்ரமாணம், மற்றும், ஸ்மிருதியாதி பிரமாணங்களில் இருந்து நிறைய கேள்விகளைக் கேட்டு சிவபெருமானுடைய பரத்துவத்தை ஸ்தாபனம் செய்தார்.

பண்டிதர் சபையிலே வைதிகாக்கிரராய் பிரகாசித்த அவரை அங்கு கூடி இருந்த பெரியோரெல்லாம் ஸ்ரீ ஹரதத்தாசாரியாரைத் துதித்து, வணங்கிச் சென்றனர். வாசுதேவரோ, தன் புதல்வருடைய அருள்வாக்கின் வன்மையை வியந்து, “யான் அறியாமலே உனக்குச் செய்தவைகளை க்ஷமிப்பாயாக!” என்று வேண்டினார். அங்குக் கூடியிருந்த வைணவர்களோ, “இது நாள் வரை வீணே வாழ்ந்த எங்களுக்குப் பிராயச்சித்தம் என்ன?!.... எங்களுக்குப் பரலோகக் கதி என்னவாகும்?” என்று கவலையுடன் வேண்டினர்.

“இதற்குப் பிராயச்சித்தம் நான் சொல்ல வேண்டியதில்லை!... ஸ்மிருதிகளும், பெரியோர்களும் சொன்ன பிராயச்சித்தமே உங்களுக்குப் போதுமானது!... உங்கள் தேகத்தைச் சங்குச்சக்கர முத்திரைகளாகச் சுட்டமைக்குப் பிராயச்சித்தம், விபூதி உத்தூளனத் திரிபுண்டரமே!... எப்படிப்பட்ட பிறப்பாளருக்கும் விபூதியே சிறந்த சாதனம்!.... சிவ பெருமானுடைய ஐந்து முகங்களில் ஒன்றான அகோர முகத்தை த்யானித்து வாழ்வீராக!” என்று ஹரதத்தாசாரியார் திருவாய் மலர்ந்தருளி, அங்குக் கூடி இருந்தோர்க் கெல்லாம் சிவத்துவப் பேற்றிற்கு அறிகுறியாகிய விபூதியிட்டும், திருவருட் பேற்றிற்கு அறிகுறியான உருத்திராக்ஷத்தைத் தரிப்பித்தும், பஞ்சாக்ஷர உபதேசம் செய்தும், அவர்களுக்கு சிவபூஜாவிதிகளையும் உபதேசித்தருளினார்.

“தன் நேத்ரக் கமலத்தினாலே முன்னமே சிவபெருமானைப் பூசித்த மஹாவிஷ்ணுவே லோகத்தைக் காக்கும்பொருட்டும், சிவபக்தியை விளைக்கும் பொருட்டும், வைதிக நெறியை நிலைநிறுத்தும் பொருட்டும் இவ்வூரில் ஹரதத்தர் எனும் திருநாமங்கொண்டு அவதரித்தார்!” என்று அசரீரி வாக்கும் அங்கு உண்டாயிற்று.!!

ஹரதத்தரை மன்னன் தன் ஆச்சார்யராகக் கொண்டது!

அப்போது அப்பகுதியை ஆண்டுவந்த, சிவலிங்க பூபதி என்னும் மன்னன் ஹரதத்தர் பால்ய வயதில் சிவபெருமானிடத்தில் திருவருள் பெற்றமையும், பிறரொருவரிடத்தில் அல்லாமல் தான் வணங்கும் சிவபெருமானிடமிருந்தே சகல வேத சாஸ்திரங்களை கற்றுணர்ந்தமையும் கேள்வியுற்று, மிகுந்த பக்தியுடையவராய் ஸ்ரீ ஹரத்தாசாரிய ஸ்வாமிகளை அடைந்து, “மதுராபுரி நாயகராகிய ஸ்ரீசுந்தரேசப்பெருமான், பாண்டி நாதனாகிய என்னைக் காக்கும் பொருட்டு உம்முருவில் இங்கு எழுந்தருளினார் போலும்!” என்று போற்றி நமஸ்கரித்து, அவருக்கு, மண், பொன், வஸ்திரம் போன்றவற்றை உபகரித்து, “உம்மை சரண் அடைந்தேன்... அடியேன் மீது நாதராகிய நீர் எமக்குத் திருவருள் பாலித்தருள வேண்டுகின்றேன்!” என்று பணிந்து, வேண்டிய மட்டும் புஷ்பங்களினால் அர்ச்சித்தான்.

“சிவபெருமானின் கிருபையில்லாமல் சிவபெருமானை சிந்தைகூட செய்ய முடியாது!...  நீவிரும் சிவகிருபைப் பெற்றீராதலால் சைவராவதற்கு அருள் பூண்டிருக்கிறீர்!” என்று திருவாய் மலர்ந்து, அம் மன்னனுக்கு ஸ்ரீ பஞ்சாக்ஷர உபதேசம் செய்து, ஸ்படிகலிங்க பூஜை செய்வித்து, சிவபெருமான் தம் அன்பனான வைச்ரவனைக் "குபேரனாக்கி" சிநேகம் கொண்டது போல், ஹரதத்தர் சிவலிங்க பூபதியைக் கொண்டார்.

ஹரதத்தர் சிவசாயுஜ்யம் அடைந்தது!!

அதன் பிறகு, ஸ்ரீ ஹரதத்தருக்கு திருமண வயது வந்ததும், அவரது பெற்றோர் அவ்வூரிலே நல்ல ஆசாரமுடையவரும், சிறந்த சிவ பக்தருமான சுப்பிரதீநர் - கமலாக்ஷி தம்பதியர்க்குப் பிறந்த சௌ. கமலவல்லியை திருமணம் பேசி முகூர்த்தம் நிச்சயிக்கப்பட்டு, பந்துக்கள், ஊரார், சிவலிங்க பூபதி, சிவகணங்கள் சூழ ஸ்ரீ ஹரதத்தர் - ஸ்ரீமதி கமலவல்லியின் திருமணம் இனிதே நடந்தேறியது. அவருக்கு எட்டு ஆண் பிள்ளைகளும் (அக்னீஸ்வரன், மகாதேவன், நீலகண்டன், சங்கரன், சந்திரசேகரன், சம்பு, மத்யார்ச்சுனேஸ்வரன், கோவடு நாயகன்) கற்பகம், மீனாக்ஷி என்று இரு புதல்விகளும் பிறந்தனர்.

அவர்களெல்லாம் சிவநேசச் செல்வர்களாய், விபூதி உருத்திராக்ஷ தாரணர்களாய், சிவலிங்கார்சனர்களாய், சதாசர்வ காலமும் ஸ்ரீ ருத்ரமும், பஞ்சாக்ஷர ஜெபமும் செய்வோராய் குடும்ப கௌரவத்தினை விருத்தி செய்தனர். அவரவர்களுக்கு தக்க சமயத்தில் திருமணமும் செய்வித்து சிறந்த சிவசிரோண்மணியாக வாழ்ந்த ஸ்ரீ ஹரதத்தாச்சாரியார், சதுர்வேத ஸாரம், சிவ தத்வ நிரூபணம், ஹரிஹர தாரதம்மியம், ஸ்ரீகண்டபாஷ்ய சமர்த்தனம், உஜ்வலம், ஞானரத்னாகரம், சிவாதிக்ய சிகாமணி, பக்தாதிக்ய சிகாமணி, சைவாகம பூஷணம், விபூதிருத்ராக்ஷ பஞ்சகம் - எனும் நூல்களை இயற்றி, பல அருஞ்சாதனைகள் புரிந்தவராக விளங்கினார்.

ஸ்ரீ ஹரதத்தாச்சாரியருடைய எல்லையில்லா பக்திக்கும், தம்மீது அவர் கொண்டிருந்த அன்பிற்கும், மகிழ்ந்த ஸ்ரீ மஹாதேவர் குரு வடிவம் கொண்டு, அவருக்குச் சாயுச்சியம் அருள வேண்டி, உமை, பிரும்மா, விஷ்ணு, ப்ருங்கி, நந்தி, மஹாகாளர் முதலானோரோடு வாத்தியக் கோஷங்கள் முழங்க, அட்டதிக்குகளெல்லாம் அளவில்லாப் ப்ரகாசம் விளங்க, தம் மந்தகாசத்தினால் முகம் சோபிக்க, மான் மழு அபயம் விளங்க இடபாரூடராய்த் தோன்றி ஸ்ரீ ஹரதத்தருக்கு சிவசாயுஜ்யம் தந்தருளினார்.

அளவில்லாப் பெருமை கொண்டு, சிவபெருமானின் மகிமைகளைத் தன்னால் இயன்ற அளவு வெளிப்படுத்தி, பேரண்ட அளவில் அமைந்த ஒர் துரும்பளவில், அதிலும் அமைந்த பல்லாயிர நுண்ணளவில் ஒரளவு நாமறியும் வண்ணம் சிவத்தொண்டில் தம் வாழ்நாள் கழித்த இவரது வாழ்வில் நடந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் மிகவும் போற்றுதலுக்குரியவை.


சுபம்

இப்பகுதிக்கு ஆதாரமான நூல்கள் விவரம்:

இப்பகுதிக்கு ஆதாரமாக நாங்கள் எடுத்தாண்ட நூல்கள் விவரம்:


01. ஹரிஹர தாரதம்மியம் -
(ம. தி. பாநுகவி) ஸ்ரீ தத்புருஷ சிவன். (1899)
02. சைவ சமய சரபம் -
ஸ்ரீ பாம்பன் ஸ்வாமிகள். (1959)
03. நாலாயிர பிரபந்த விசாரம் -
ஸ்ரீ பாம்பன் ஸ்வாமிகள். (1956)
04. அபிதான சிந்தாமணி -
ஸ்ரீ சிங்காரவேலு முதலியார். (1918)
05. மெய்கண்ட சிவதூஷண நிக்ரஹம் -
ஸ்ரீ டி. முனிசாமி முதலியார் (1900)
06. ஸ்ரீ மஹாபாரதம் -
ஸ்ரீ டி. வி. ஸ்ரீநிவாஸாசாரியார் (1926)
07. ஆதித்ய ஹ்ருதயம் -
தேதியூர் ஸ்ரீ ஸுப்ரமண்ய சாஸ்திரிகள்
08. புருஷ ஸூக்தம் -
ஸ்ரீ அண்ணா
09. வேதாகம தர்ம வித்யா -
ஸ்ரீ நா. சாம்பசிவ சாஸ்திரிகள் (1932)
10. சிவபரத்துவ நிச்சயம் -
ஸ்ரீ ஆ. ஈஸ்வரமூர்த்திப்பிள்ளை (1939)
11. சிவாலயத்தில் சமஸ்கிருத மந்திரங்களே வேண்டும் -
ஸ்ரீ ஆ. ஈஸ்வரமூர்த்திப்பிள்ளை
12. சுலோகபஞ்சக விஷயம் -
ஸ்ரீ ஆ. ஈஸ்வரமூர்த்திப்பிள்ளை (1938)
13. தமிழ் மன்னன் கோனேரிராயன் -
ஸ்ரீ குடவாயில் பாலசுப்ரமணியன் (2001)
14. அருட்பா - மருட்பா -
ஸ்ரீ ப. சரவணன் (2001)
15. சைவ வேதாந்தம் -
ஸ்ரீ காசிவாசி. செந்திநாதையர் (1920)
16. ப்ராசீன் பாரத் மே கோமாம்ஸ -
ஸ்ரீ எஸ். மஹாலிங்கம். பி.ஏ (தட்சிணபாரத் ஹிந்தி பிரச்சார சபை-திருச்சி)
17. புரட்சி 1857 ஓர் ஆய்வரங்கு -
பி. சி. ஜோஷி.
18. ப்ரணவ வித்யா பரிமளம் எனும் ஓங்கார விளக்கம் -
ஸ்ரீ சிவ அருணகிரி முதலியார் (1920)

ஹரிஹர தாரதம்மியம் முன்னுரை


ஸ்ரீ மஹாதேவ ஜெயம்
| சிவாத்பரதரம் நாஸ்தி |


ஸ்ரீ ஹரதத்தாச்சாரியார் அருளிய
ஹரிஹர தாரதம்மியம்


முன்னுரை

தஞ்சை மாவட்டத்தில் கும்பகோணம் அருகில் உள்ள கஞ்சனூர் எனும் தலத்திலே ஓர் வைணவக் குடும்பத்தில் பிறந்து, தன் குடும்பத்தினரின் எதிர்ப்பு, மற்றும் வைணவரின் எதிர்ப்பையும் பொருட்படுத்தாது சதா சர்வகாலமும் அத்தலத்தில் வீற்றிருந்து அருள்பாலிக்கும் ஸ்ரீ அக்னீஸ்வரரைத் தன் சிந்தையில் இருத்திச் சிவாலயக் கைங்கர்யங்கள் பலசெய்து “சைவத்தில் சிறந்த சமயமில்லை; சிவபெருமானைத் தவிரப் பரம் இல்லை” என்று வைணவப் பெரியோர், ஊர் மக்கள், அரசன் என அனைவரது முன்னிலையிலும் 100 செய்யுள்களைக் கேள்வியாக அமைத்துக் கஞ்சனூரில் உள்ள பெருமாள் ஆலயத்தில் பழுக்கக் காய்ச்சின இரும்பு முக்காலியின் மீதமர்ந்து வாதிட்டு - நிறுவி, பாஷண்ட மதமாகிய வைஷ்ணவத்தினை அநுசரித்து வாழ்வோரை மாற்றி, அவர்களைச் சைவர்களாக்கியும், இறந்த பசுவுக்கு முக்தியளித்தும், சிவலிங்கச் சோழனுக்குக் கைலாயக் காட்சியளித்தும், நமசிவாய எனும் ஐந்தெழுத்தின் பெருமையையும், அருமையை பரப்பியும், கஞ்சனூரைச் சுற்றியுள்ள சிவாலயங்களுக்குத் தொண்டுகள் பல புரிந்தும், இன்னபிற அரிய செயல்களையும் புரிந்த இவர் திருமாலின் அவதாரம் என்று “சிவரஹஸ்யம்” கூறுகிறது.

(நம்மவர்களிலே சிலருக்கு வைணவர்களை பாஷண்ட மதஸ்தராக (புறச்சமயத்தவர்) சொல்லுவது ஆச்சரியமாக இருக்கலாம். வைணவர்கள், “நான்கு வேதங்களையும் பதினெட்டுப் புராணங்களையும் எம்பெருமான் ஸ்ரீ நாராயணனே செய்தான்!.” என்று தாபித்து, அவைகளில் விதித்தபடி நடவாமல் பாஞ்சராத்திரம், வைகானசம் ஆகிய இருநூல்களை “மெய்நூல்” எனக்கொண்டு அவைகளில் கற்பித்தபடியே நடக்கின்றனர். இவ்வைணவருள் வடகலை, தென்கலை எனும் இருவகையுண்டு. இவ்விருதிறத்தாரும் தமக்கு பொதுவான சாத்திர நூல் ‘இதுதான்’ என்று ஒருசாரார் பாஞ்சராத்திரத்தையும், இன்னொரு சாரார் வைகானசத்தையும் கூறி, தமக்குள் தர்க்கம் செய்து பிணங்குவதை “புண்ணியமாகவும்” அது போதாதபோது சிவனாரையும், சிவனடியாரையும், சிவ சம்பந்தமான புராணங்களையும், சிவாகமங்களையும் இகழ்ந்து தூஷிப்பதை “தர்மமாகவும்” கொண்டு வாழும் இவர்களை ‘பாஷண்டிகள்’ என்று சொல்வதில் பிழையென்ன?

தவிர, இவ்வைணவர்கள் நான்கு வேதத்தை ‘மெய்நூல்’ என்று கொண்டால், வேறு நூல் இவர்களுக்கு வேண்டியதில்லையே?! வேதத்தில் விதித்தபடி  அவர்கள் நடந்தால் வேதத்திலே “பரம்” என்று சொல்லி நிச்சயித்த ஈச்வரரை தாம் வணங்கும் நாராயணரைப் போன்றே வணங்குதல் வேண்டும். வேதத்தை போதுமான ‘சத்திய நூலாக’ கொண்டிருப்பார்களேயானால், பாஞ்சராத்திரம், வைகானசம் ஆகிய இரண்டு நூல்களையும் அவர்கள் கொண்டாட அவசிய மில்லை!. ஆனால் அவர்கள் இவ்விரண்டு நூல்களையே ‘மெய்நூல்கள்’ ஆக கொண்டிருப்பது வேதத்தை மதியாமல் இருக்கும் அவர்களது செய்கையே சொல்லிவிடுகிறபடியால் இவர்களை ‘பாஷண்ட மதஸ்தர்கள்’ என்று சொல்லுவதிலும் என்ன பிழை இருக்கிறது?)

“ஹரிஹர தாரதம்மியம்” என்னும் இந்நூலை எழுதிய ஸ்ரீ ஹரதத்தரின் சரிதம் உணர்ந்தாலன்றி, இந்நூலின் மகிமையை ஓரளவேனும் விளங்கிக் கொள்ள முடியாது என்பதினால், ஸ்ரீ ஹரதத்தாச்சாரியாரின் சரிதம் இந்நூலில் ஆரம்பத்திலேயே சுருக்கமாகத் தந்திருக்கின்றோம்.  இந்நூலில் உள்ள ஹரிஹர தாரதம்மியம் பகுதி ஸ்ரீ தத்புருஷ சிவன் என்பவருடைய வியாக்கியானத்தைத் தழுவி எழுதப்பட்டதாகும்.

இந்நூலில் ஸ்ரீ ஹரதத்தாச்சாரியார் அருளிய "ஹரிஹர தாரதம்மியம்" தவிர்த்து, "சிவன் என்பவர் யார்?" மற்றும் "ஸ்ரீ சிவசஹஸ்ர நாமம் அகராதியும் - பொருளும்" ஆகியவையும் சேர்க்கப்பட்டுள்ளன. (இவை பிற்காலத்தில் தனித்தனி தலைப்பிடப்பட்டு வெளியிட உத்தேசம்... இதன் தொடர்ச்சியாக வரும்!)  இந்நூலில் காணப்படும் தகவல்கள் அனைத்தும் நாங்கள் ஏதோ சிவபெருமா¬க் கண்டுவிட்டப் பரவசத்தில் எழுதப்பட்டதாகக் கருத வேண்டாம்.

அனைத்தையும் "சமநோக்கில்" பார்க்கக்கூடிய பக்குவம் வருவதற்கு, முதலில் நாம் "ஒன்றை" உணரவேண்டும். பிறகுதான் மற்றவை எல்லாம் நமக்குத் தெரியவரும். விஷய சுகங்களில் பற்று என்பதை; அவற்றை வெறுப்பதின் மூலம் அவற்றின் மீதுள்ள "பற்றை" நாம் அறுக்கலாம். அவ்வகையில் நாம் "ஒன்றை"ப் பற்றி அறிய வேண்டுமென்றாலும், அதன் மீது "பக்தி" ஏற்படவேண்டுமென்றாலும் நாம் 'பலவற்றை' வெறுத்துத்தான் ஆகவேண்டியிருக்கிறது. அதன் பிறகு நாம் "ஒன்றை" அறிந்து கொண்டுவிட்டால், பிறகு "மற்றதை" வெறுக்க முடியாது. சகலத்திலும் "அன்பு" நிறைந்திருக்கும்.  சகலரிடத்திலும்; சகலத்திலும் எவ்விதப் பாகுபாடும் இல்லாத அந்த அன்பை ஒவ்வொருவரும் “சிவம்” என்று உணர்ந்து, ஓர் “நல்வாழ்வை” வாழ ஆரம்பிக்கலாம்.

"என் பக்தர்களை அடையும் வழியை நானே தேடுகிறேன்" என்கிறார் ஸ்ரீ பரமேச்வரர். நம்மைத்தேடி ஸ்ரீ பரமேச்வரர் வருவதற்கு இந்நூல் ஓரளவேனும் "காரணமாக" இருக்கும் பட்சத்தில், இந்நூலின் பயன் அவனருளால் "இருக்கிறது" என்று நாங்களும் மகிழ்வடைவோம்.

அளவில்லாதவராய், வாக்கு-வியவஹாரத்திற்கு எட்டாதவராய் பிரபஞ்சோபசாந்தராய், அத்வைதராய் (பிரும்மா, விஷ்ணு, உருத்திரன் முதலியோருக்கு மேலானவராய்) நான்காவது தெய்வமாய், ஓர் உருவம், ஒரு பெயர் இல்லாது ஒங்காரத்தையே உருவமாகவும், ஓங்காரத்தையே பெயராகவும், ஓங்காரத்தையே பொருளாகவும் கொண்ட சிவபெருமானே "பரம்" என்பதை அறிந்துய்யும் பரமபாக்கியம் இல்லாதவர்கள், “பரம்” என்றால் “சிவன்” என்று ஓரளவேனும் அறிந்து கொள்ளும் பொருட்டு, இந்நூலில் சிவபெருமானின் பெருமைகள், இதிஹாச புராணாதிகளின் வாக்கியங்கள், சிவபக்தியொன்றே தம் வாழ்வு என்று வாழ்ந்தவர்களின் பங்களிப்புகள் என்று எங்களால் இயன்ற அளவு தொகுத்து அளித்துள்ளோம். 

"வித்யை 14 என்றும், சுருதியாதி நூல்களே பிரமாண நூல்கள்" என்றும் ஆன்றோர்களால் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாலும், ஜைமினி முனிவரால் வகுக்கப்பட்ட "மீமாம்சை" நியாயங்களாலும் இந்நூலில் பூர்வ விஷயங்களை ஒட்டியும், அதைப் பின்பற்றி பல பெரியோர்கள் அளித்துள்ள அவர்களது நூல்களில் இருந்தும், இப் பகுதியில்  பெரும்பாலும் எடுத்தாளப் பட்டிருக்கிறது.  மீமாம்சை என்றால் என்ன? என்பது பற்றி காஞ்சிப் பெரியவர் தன்னுடைய அருளுரையில்;

"வேதம் என்பது ஈச்வரன் உண்டாக்கிய சட்டம். ஆதி அந்தமில்லாத நித்யமான சட்டம், நாம் பிரஜைகள், ஈச்வரன் நமக்கு அரசன். அவர் பல அதிகாரிகளை ஏற்படுத்தி யிருக்கிறார். அவருடைய ராஜாங்கத்தில் இந்திரன், வாயு, வருணன், அக்கினி, யமன், ஈசானன், குபேரன், நிர்ருதி முதலிய அஷ்ட திக்பாலர்களையும் இன்னும் பல தேவதைகளையும் லோகத்தை ஸம்ரக்ஷிக்கும் அதிகாரிகளாக நியமித்திருக்கிறார். அந்த அதிகாரிகள் பதினாலுலோகத்திலும் உள்ள ஜீவராசிகளாகிய பிரஜைகளை ரக்ஷிப்பதற்கு ஒரு சட்டம் வேண்டும் அல்லவா? அந்தச் சட்டம்தான் வேதம். அதன்படி பிரஜைகளான நாம் எப்படி நடப்பது, அதிகாரிகள் எப்படி பரிபாலனம் பண்ணுவது என்று ஆராய்ச்சி செய்து அறியலாம். லௌகிகத்தில் இம்மாதிரி ஸந்தேகம் வந்தால் ஜட்ஜுகள் யோசித்துத் தீர்ப்புச் சொல்லுகிறார்கள். வக்கீல்கள் ஆலோசிக்கிறார்கள். அதுபோல தர்மத்தை அநுஷ்டானம் பண்ணும் வழிகளையெல்லாம் சொல்லும் வேதமாகிற சட்டத்திற்கு அர்த்த நிர்ணயம் பண்ணினவர் ஜைமினி. அதுதான் மீமாம்ஸை."

"சர்க்காரில் அநேக சட்டம் பண்ணுகிறார்கள். ஆனால் அந்தச் சட்டங்களின் அபிப்ராயங்களைப் பற்றியே சில சமயங்களில் சிக்கல்கள் வந்து விடுகின்றன. அப்போது சட்டத்துக்கு வியாக்கியானம் இப்படித்தான் என்று இன்னொரு சட்டம் வகுத்து, அதன் மூலம் நிர்ணயம் செய்கிறார்கள். இதை Law of interpretation என்கிறார்கள். இப்படியே ஈச்வரனின் நிரந்தரச் சட்டமான (Eternal Law ஆன) வேதங்களின் தாத்பர்யத்தை நிர்ணயம் செய்ய, மீமாம்ஸை என்ற சாஸ்திரம் வியாக்கியான சட்டமாக (Law of Interpretation ஆக) இருக்கிறது. வேத வாக்கியம் ஒன்றுக்கு இன்னதுதான் அர்த்தம் என்று நிர்ணயம் பண்ணுவதற்கு, மீமாம்ஸா சாஸ்திரத்தில் ஆறு வழிகள் சொல்லியிருக்கின்றன. அந்த ஆறு;

உபக்ரம- உபஸம்ஹாரௌ அப்யாஸ: அபூர்வதா பலம்|
அர்த்தவாத உபபத்நீ ச லிங்கம் தாத்பர்ய நிர்ணயே||


-என்று சொல்லியிருக்கிறது. கிருஷ்ண த்வைபாயனர், (வியாஸர்) ஒருத்தரே பல வேதங்களைக் கற்றுக்கொள்கிற பழைய முறைபோய், ரிக், யஜுஸ், ஸாம, அதர்வங்களில் ஏதாவது ஒன்றிலே ஒரு சாகையைப் படித்து மனப்பாடம் பண்ணி, அதன்படி செய்தால் போதும் என்ற புது ஏற்பாட்டைச் செய்தார். தம் சிஷ்யர்கள் நூலு பேரில் ஒவ்வொருவரிடமும் ஒரு வேதம் என்று பிரித்துக்கொடுத்து, 'இதன் சாகைகளை நீங்கள் பிரசாரம் செய்யுங்கள்' என்று  ஆக்ஞை பண்ணினார். ரிக்வேத சாகைகளைப் பைலர் என்ற சிஷ்யரிடமும், இப்படியே யஜுஸை வைசம்பாயன ரிடமும், ஸாமத்தை ஜைமினியிடமும், அதர்வத்தை ஸுமந்து என்பவரிடமும் கொடுத்துப் பிரசாரம் செய்ய வைத்தார்." என்று நமக்கு புரியும்படி விளக்கியிருக்கிறார்.

இவ்விதம் பூர்வத்தில் உள்ள சுருதியாதிகளில் சொல்லப்பட்ட பலவற்றின் தொகுப்பும், சிவபெருமானின் அருள் பெற்ற பல பெரியோர்கள் அவர்களது வாழ்க்கையில் அவர்கள் சொன்ன அருளுரையின் தொகுப்புமாக இந்நூலில் நாங்கள் தொகுத்து அளித்துள்ளோம். இந்நூலில் உள்ளவை ஏதோ ஒருதலைப் பட்சமாக அளிக்கப்பட்டு இருப்பதாக கருத வேண்டியதில்லை.

நாங்கள் இந்நூலைச் செய்து அதனால் கீர்த்தி அடைய வேண்டும் என்கிற எண்ணம் கொண்டு நாங்கள் இதில் பிரவேசிக்கவும் இல்லை. சிவநாமோச்சரணமும், சிவ சம்மந்தமான செயல்களில் ஈடுபடுவதும் பரமசிரேஷ்டமான நலன்களையும், பலன்களையும் தருமென்று பெரியோர்களும், சிவனடியவர்களும் வாழ்ந்து காட்டிச் சென்றதினால் எங்களது அற்ப புத்தியில் ஏற்பட்ட மாறுதலானது இந்நூலைச் செய்யத் தூண்டிற்று.
 
இவ்வளவு செய்கைகளுக்கும் எங்கள் சாமர்த்தியமே காரணமென்று யாரும் மலைக்க வேண்டாம். ஈசுவராநுக்ரஹமும், மஹாவித்வான்களான பெரியோரது உதவியும் ஒருவனுக்கு உண்டானால் சாதாரணமானவர்கள் பண்டிதர்களாவதும், சிரேஷ்டமான குணவான்களாக மாறுவதும் நாம் கண்கூடாகக் காணக்கூடியதாய் இருப்பதால், எங்களையும் அவ்விதமே பாவித்துக் கொண்டு இம் மேலான காரியத்தில் பிரவேசித்துள்ளோம். ஈசுவராநுக்ரஹம் என்பது முடவனை மலை தாண்டவைக்கும், ஊமையைக் கவிபாடவைக்கும்!!. நம்மைப்படைத்த ஸ்ரீ பரமேச்வரரின் கல்யாணக் குணங்களையறியவும், அவ்விதம் நாமறிந்து நம்மால் அநுசரிக்கக்கூடிய நம் சிவபக்தியின் வளர்ச்சிக்கும், இந்த நூல் ஓரளவேனும் உபகாரமாக இருக்குமேயானால் எங்களுக்கு அதைவிட மகிழ்ச்சி வேறென்ன இருக்க முடியும்?.

1927ம் ஆண்டு தேவகோட்டை சிவாகம சித்தாந்த பரிபாலன சங்கத்தாரால் நா. கிருஷ்ண சாஸ்திரிகள், மு.சுப்ரமணிய சாஸ்திரிகள் ஆகியோரை உரையாசிரியராகக் கொண்டு, பதிப்பித்து வெளியிடப்பட்ட "இரத்னத்ரயம்" என்னும் நூலில் முகவுரையாக சொல்லப் பட்டதில் உள்ள ஒரு பகுதியை இந்நூலிற்கும் முன்னுரையின் கருத்தாக கொண்டிருக்கிறோம்.  அந்நூலில்;

"உலகத்தில் உள்ள பல சமயங்களையும் அங்கமாகக்கொண்டு அதன் அங்கியாய் ராஜாங்கத்தமர்ந்து விளங்குவது வைதிக சைவ சமயமேயாம். இது அங்கமாயுள்ள ஏனைய சமயங்களுள் ஒன்றையேனும் தாழ்ந்ததென்று நிந்திக்கிறதில்லை. ஏனைய சமயப் பொருளையே மேலான பொருளாகக் கொள்ளுதல் கூடாதென்று அறிவிக்கும். ஏனைய சமயங்களில் உள்ள பொருள்களனைத்தும் சைவ சமயத்தில் அங்கங்களாகக் காணப்பட்டு ஏனைய சமயங்களில் உள்ள பொருள்கள் அனைத்தையும் சைவ சமயங் கொள்வது போல, சைவ சமயத்தில் உள்ள பொருள்களனைத்தையும் ஏனைய சமயங்கள் ஒன்றுங் கொள்வதில்லை.  ஆகையால் ஏனைய சமயங்கள் போல் சைவ சமயம் தோல்வியடையப் படுகிறதில்லை."



இரா. சங்கரநாராயண அய்யர்
சிவத்திருச்சபை
புதுச்சேரி.

ஹரிஹரதாரதம்மியம் - ஒரு முன்னோட்டம்

வணக்கம்.


எச்சரிக்கை:

நிறைய கதாகாலட்சேபம் கேட்கிற ஆசாமிகளாய் இருந்தால், அல்லது தற்காலத்தில் வெளிவரும் ஆன்மீக நூல்கள் படிக்கிற ஆசாமிகளாய் இருந்தால் தயவு செய்து இப்பகுதிக்குள் நுழையாதீர்கள்.

நிறைய பேர் கடவுள் பற்றின தமது அபிப்பிராயத்திற்கு மேற்சொன்ன கதாகாலட்சேபம் மற்றும் ஆன்மீக நூல்கள் ஒரு காரணம். அவரவர் தமது கர்மத்திற்கீடான வாழ்வை வாழ்கிறார்கள் என்பதை அவரவர் உணர்ந்தால் இது பு¡¢யலாம்.

நிறைய உருவங்களை பெரியோர் "கடவுளாக" நமக்கு அறிமுகம் செய்து வழிபட்டு நற்கதி அடைந்திருக்கிறார்களே? என்றும் உங்களுக்குத் தோன்றலாம். முருகர், வள்ளி, தெய்வானை, மா¡¢யாத்தாள், முனி, வினாயகர், பத்ரகாளி, காளி, சாமுண்டி, ஐயனார், வீரன், பெருமாள், கோவிந்தன், விஷ்ணு, இராமர், கிருஷ்ணர் மற்றும் பல அவதாரங்கள், மற்றும் தனி மனிதர்கள் (சித்தர்கள், ஸ்வாமிகள், பாபா முதலியோர்) இவர்களை வழிபட்டு 'பேறு' பெற்றோர் இருக்கிறார்களே? என்றும் தோன்றலாம்.

இவ்விதம் உங்களுக்குத் தோன்றுவதற்கும் முன்சொன்ன உபன்யாசம் (கதாகாலட்சேபம்), ஆன்மீக நூல்கள்தான் காரணம் அல்லது அவற்றை நம்பும் உங்களது நெருக்கமான நண்பர்கள் காரணம் என்பதை தீவிர யோசனைக்குப் பிறகு "ஆமாம்!" என்று ஒப்புக்கொள்வீர்கள்.

"ஈஸ்வரன்" என்கிற தத்துவத்தை வழிபட்டு "பேறு" பெற்றவர்களும் இல்லை என்பதையும் உணர்வீர்கள். அது மிக மிக மிக கடினமான ஒன்று என்பதையும் அவ்விதம் பேறு பெற்றதற்கு அல்லது பெறுவதற்கு ஈசனின் அருளின்றி முடியாது என்பதையும் உணர்வீர்கள்.

சிவத்தை வழிபட்டு பேறு பெற்றதாக நாயன்மார்கள் சா¢தத்தை சொல்லுகிறார்களே? என்று உங்களுக்குத் தோன்றலாம்... இதையும் நீங்களே யோசித்து (ஞானமிருந்தால்) ஒரு முடிவுக்கு வருவீர்கள். நாம் சிவத்தை வழிபட்டு நற்கதியடைய பொ¢யோர்களால் வகுக்கப்பட்ட ஒரு நியதி அது என்பது தெரியவரும். அதனால்தான் நாயன்மார்களுடைய காலத்தை எடுத்தாண்ட சேக்கிழார் அதை சிவபக்திக்குப் பயன்படுத்திக்கொண்டார்.

நாயன்மார்களுக்கு முன்பு எவ்வளவோ சிவனடியார்கள் இருந்திருக்கிறார்கள். அவர்களுடைய சா¢த்திரம் நமக்குத் தெரியவில்லை. அப்போதைய காலகட்டத்திற்கு அது அவசியமும் இல்லாமல் இருந்ததினால்!.

ஒவ்வொரு கால கட்டத்திலும் மனுஷர்களுடைய புத்தியின் வீர்யம் குறைவு பட்டுக்கொண்டே வருவதால் சேக்கிழாருடைய காலத்தில் அவரது அவதாரம் "பெரியபுராணத்திற்காக" நிகழ்ந்தது - சிவனருளால்!.

கடவுள் என்றால் அது சிவம், சங்கரர், பகவன், மகேஸ்வரர் எனும் முதலிய பல திரு நாமங்களினால் ஸ்ரீ சாம்பசிவத்தை நமக்கு நம்முடைய புராணங்கள், உபனிஷத்துக்கள், (ப்ரஸ்தான த்ரயம் உட்பட) இதிகாசங்கள் முதலிய எல்லாமே சிவத்தைத்தான் மஹத்தான மஹத் என்று சொல்லியிருக்கிறது. ஒவ்வொரு பகுதிகளில் அவ்வப்போது நம் முன்னோர்களால் அவதாரம் அல்லது மதகுரு என்று ஏற்றுக்கொள்ளப்பட்ட தனி நபர்கள் தமது சித்தாந்தத்தை தம்மை நம்பும் சமூகத்தில் 'இதுவும் தெய்வம்; அதுவும் தெய்வம்" என்று பரப்பி வந்தனர். நம் முன்னோர்களும் 'இவர் சொன்னால் அது சா¢யாய் இருக்கும்!' என்று அர்ஜுனன் போல அவர்களை எதிர்கேள்வி கேட்காமல் ஒப்புக்கொண்டு தம் சந்ததிகளையும் அதை ஏற்குமாறு செய்ததினாலும், வெள்ளையர்களுடைய அல்லது அன்னிய மதத்தினா¢ன் சூழ்ச்சியாலும் நாம் பலவற்றை 'தெய்வம்' என்று ஏற்கும் இழி நிலை ஏற்பட்டுவிட்டது.

இதைப் பற்றியும் நான் தனியே உங்களுக்கு உங்களுடைய உதவியுடன் பொ¢தாய் எழுதலாம் என்று இருக்கிறேன்.

சிவத்தின் மஹிமையை ஸ்ரீ கிருஷ்ணராலும் முழுதுமாக சொல்லமுடியவில்லை என்று ஸ்ரீ மஹாபாரதம்  அனுசாசன பர்வத்தில் பாரதக் கதை மாந்தர்கள் அனைவரிடமும் சொல்லி ஒப்புக்கொண்ட பிறகு நான் என்ன சொல்லமுடியும்? அந்த சர்வேஸ்வரரைப்பற்றி?!..

சிறுபிள்ளைத்தனமாகத்தான் இருக்கிறது. இருந்தும் உங்களுக்கு சிவ விஷ்ணு பேதத்தையும், சிவனுடைய உயர்வையும் சொல்வதற்கு நான் முற்பட்டதற்கு நமக்கு முன் வாழ்ந்த ஸ்ரீ ஹரதத்தர் பேருதவி செய்திருக்கிறார். நான் என்னுடைய தனிப்பட்ட கருத்தை சொல்வதற்கும், அத்தாட்சியோடு (புராண, இதிஹாச, உபனிஷத்துக்களுடைய சான்றோடு) ஸ்ரீ ஹரதத்தர் சொன்னதை அப்படியே உங்களுக்கு தொ¢விப்பதற்கும் உள்ள வித்தியாசத்தை நீங்கள் ஒப்புக்கொள்வீர்கள்.

ஸ்ரீ ஹரதத்தரும் ஸ்ரீ அப்பைய தீக்ஷிதரும் நம் தமிழ் நாட்டில் தோன்றிய மாபெரும் சைவ சீலர்கள். ஸ்ரீ அப்பைய தீக்ஷிதர் தெலுங்கு பிராமணர். ஸ்ரீ ஹரதத்தரோ பிறவியில் வைணவர்!. ஆகவே முதலில் நான் இந்த மஹானுடைய 'ஹரிஹர தாரதம்மியம்' எனும் நூலில் இருந்து அவரால் சொல்லப்பட்டவற்றை உங்களோடு முதலில் பகிர்ந்து கொள்ள இருக்கிறேன்!.

ஸ்ரீஹரதத்தருடைய சா¢த்திரத்தை முதலில் தொ¢ந்து கொள்ளாவிட்டால் அவர் எழுதிய "ஹரிஹரதாரதம்மியம்" பற்றி உங்களால் சிறிதுகூட தெரிந்து கொள்ளமுடியாது என்பதினால் ஸ்ரீ ஹரதத்தருடைய சரித்திரத்தை சுருக்கமாக தருகிறேன். முதலில் அதை படியுங்கள். அதன் பிறகு அவா¢யற்றிய "ஹரிஹரதாரதம்மியம்".

ஈஸ்வரோ ரக்ஷது!.


தொடரும்.